மரங்களில் ஆணி அடித்து விளம்பர பதாகைகள் பொருத்தப்படுவது நீண்ட காலமாகவே நடந்து வருகிறது. இதனால் மரங்களின் வளர்ச்சி பாதிக்கப்படுகிறது. ஆணிகள் அடிக்கப்பட்ட மரங்களில் தேனீக்கள் கூடு கட்டாது என்பதில் இருந்தே பசுமைக்கும், பல்லுயிர் சூழலுக்கும் எவ்வளவு பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகிறது.
இப்படிப்பட்ட சூழலில் தான், மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றுவதற்காக தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்கள் பலர் ஒருங்கிணைந்து, 'ஆணி பிடுங்கும் திருவிழா' என்ற பெயரில் புதிய வடிவிலான களப்பணியை தொடங்கி உள்ளனர். சமூக வலைத்தளம் மூலம் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்து, மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை அகற்றும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் தேனியில் கடந்த மாதம் 17-ந்தேதி ஆணி பிடுங்கும் திருவிழா தொடங்கியது.
அதைத் தொடர்ந்து, தேனி, கம்பம், உத்தமபாளையம், சின்னமனூர் உள்ளிட்ட இடங்களிலும் ஆணிகள் பிடுங்கும் களப்பணியை தொடங்கி தீவிரமாய் சேவையாற்றி வருகின்றனர். ஆணியை அகற்றிய இடத்தில், பூச்சி, வண்டுகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க வேப்ப எண்ணெய் மற்றும் மஞ்சள் கலந்த கலவையை தடவி வருகின்றனர். வயது வித்தியாசமின்றி சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை இந்த தன்னார்வலர்களின் களப்பணியில் இணைந்து கொள்வதை பார்க்க முடிகிறது. சாதி, மதங்களை கடந்து, அமைப்புகள் என்ற கட்டமைப்பை எல்லாம் புறந்தள்ளி தன்னார்வ இளைஞர்கள் இந்த பணியை முன்னெடுத்துள்ளனர்.
தமிழகத்தில் இதுநாள் வரையும் சமூக சேவை என்றால் ஏதாவது தன்னார்வ அமைப்போ, தொண்டு நிறுவனமோ அந்த பணிகளை முன்னெடுக்கும். அதில் தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள். ஆனால், தேனியில் தன்னார்வ தொண்டர்கள் மற்றும் பத்திரிக்கையாளர்கள் ஆணி பிடுங்கும் திருவிழாவை நடத்துகின்றனர். அதில், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று களப்பணியாற்றுகின்றனர். பசுமை செந்தில், விக்னேஷ்பாபு, பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட தன்னார்வல இளைஞர்களின் ஒருங்கிணைப்பில் தொடர்ச்சியாக ஆணி பிடுங்கும் பணி நடந்து வருகிறது. பணிகளை தீவிரப்படுத்தும் நோக்கில், "நடைப் பயிற்சி நேர களப்பணி" என்ற பெயரில் தேனி நகரில் உள்ள குடியிருப்புகளில் நிற்கும் மரங்களில் அடிக்கப்பட்ட ஆணிகளை பிடுங்கும் பணியை தினமும் காலை 6.30 மணி முதல் 8 மணி வரை நடத்தி வருகின்றனர். தன்னார்வலர்களின் இந்த முயற்சிக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகிறது.
இது சம்மந்தமாக தன்னார்வ இளைஞர்களில் ஒருவரான பசுமை செந்திலிடம் கேட்ட போது, மரங்களில் ஆணி அடிப்பதால் அதன் ஆயுள் குறையும். ஆணியை அகற்றி விட்டால், அதன் ஆயுளை பாதுகாக்கலாம். இதுகுறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்பதற்காக ஆணி பிடுங்கும் திருவிழா என்ற பெயரில் களப்பணியாற்றி வருகிறோம். அமைப்புகளுக்கு அப்பாற்பட்டு சமூக வலைத்தளங்கள் மூலம் ஒருங்கிணைந்து தன்னார்வலர்களால் மேற்கொள்ளப்படும் பணி இது. சென்னை மாநகராட்சி முனிசிபில் சட்டம் 1919- ஆம் ஆண்டு 326 விதியின்படி மரங்களில் ஆணி அடிப்பது தண்டனைக்குரிய குற்றமாகும்.
தேனி மாவட்டத்தில் மரங்களில் ஆணி அடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாக உள்ளது. சில தனியார் பள்ளி, கல்லூரி நிர்வாகங்கள், நீட், கணினி, வேலைவாய்ப்பு பயிற்சி மையங்கள், உரம், பூச்சிக் கொல்லி மருந்துகள் விற்பனை நிறுவனங்களை சேர்ந்தவர்கள் தான் மரங்களில் அதிக அளவில் ஆணி அடித்து தங்களின் விளம்பர பதாகைகளை தொங்கவிட்டுச் செல்கின்றனர். நெடுஞ்சாலைத்துறையினரும், சாலையோரம் உள்ள மரங்களில் ஆணிகளை அடித்து ஒளிரும் பட்டைகளை பொருத்தி வருகின்றனர். எனவே, மரங்களில் பொருத்தப்பட்டுள்ள விளம்பர பதாகைகளை அகற்ற வேண்டும் என்றும் இனி வரும் காலங்களில் மரங்களில் ஆணி அடிக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவும் அளித்துள்ளோம். தேனியை தொடர்ந்து சேலத்தில் ஆணிகளை பிடுங்கும் பணியை தன்னார்வ இளைஞர்கள் முன்னெடுத்துள்ளனர். அடுத்து திருப்பூர், மதுரை, கோவை உள்பட மேலும் சில இடங்களிலும் தொடங்க உள்ளனர் என்று கூறினார்.
ஆக தேனி மாவட்டத்தில் தன்னார்வலர்களில் இந்த களப்பணிக்கு காவல் துறையினர் மட்டுமே ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். ஆனால் மாவட்ட நிர்வாகத்திடம் இந்த தன்னார்வ தொண்டர்கள் கோரிக்கை வைத்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.