தர்மபுரி அருகே, குடிபோதையில் எஸ்எஸ்எல்சி மாணவியிடம் பாலியல் ரீதியாக அத்துமீறிய ஆசிரியர்கள் இருவரை மகேந்திரமங்கம் காவல்துறையினர் கைது செய்தனர்.
தர்மபுரி மாவட்டம் மகேந்திரமங்கலம் அருகே, ஜக்கமசமுத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இதில், 600- க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் அரூரைச் சேர்ந்த சின்னமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரும் வரலாறு பாட ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர்.
இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் முருகேசன். கண் பார்வையற்ற மாற்றுத்திறனாளி. ஆசிரியர்கள் சின்னமுத்து, லட்சுமணன் ஆகிய இருவரும் அடிக்கடி மது அருந்திவிட்டு குடிபோதையில் பள்ளிக்கு வந்துள்ளனர். மேலும், அதே பள்ளியில் எஸ்எஸ்எல்சி படித்து வரும் ஒரு மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தும் வந்துள்ளனர். மாணவியின் செல்போனுக்கு காதல் கவிதைகள், ஆபாசமான குறுந்தகவல்களையும் அனுப்பி உள்ளனர்.
இவ்வாறு செல்போனுக்கு குறுந்தகவல் அனுப்புவதை நிறுத்துமாறும், தன்னிடம் தவறாக நடக்க முயற்சித்தால் தலைமை ஆசிரியர், பெற்றோரிடம் புகார் செய்வேன் என்றும் அந்த மாணவி கூறியிருக்கிறார். அதற்கு ஆசிரியர்கள் இருவரும், இதைப்பற்றி வெளியே யாரிடமாவது கூறினால் தேர்வில் மதிப்பெண்களைக் குறைத்து பெயில் ஆக்கிவிடுவோம் என்று மிரட்டத் தொடங்கியுள்ளனர். அதனால் பயந்துபோன அந்த மாணவி யாரிடமும் புகார் சொல்லாமல் மறைத்து விட்டார்.
இந்த நிலையில்தான், புதன்கிழமை (ஜன. 8, 2020) அவர்கள் இருவரும் குடிபோதையில் பள்ளிக்கு வந்ததுடன் மீண்டும் அந்த மாணவியிடம் பாலியல் ரீதியாக எல்லை மீறி நடக்க முயற்சித்துள்ளனர்.
கையறு நிலைக்குத் தள்ளப்பட்ட அந்த மாணவி, நடந்தவற்றை ஒன்று விடாமல் தன் தாயிடம் கூறி கதறி அழுதுள்ளார். இதுகுறித்து ஊர் மக்களுக்கும் தெரிய வந்தது.
மாணவியின் பெற்றோர், பொதுமக்கள் என நூற்றக்கும் மேற்பட்டோர் பள்ளிக்குச் சென்று விசாரித்தனர். அப்போதும் ஆசிரியர்கள் மது போதையில் இருந்ததைக் கண்டு இருவரையும் சரமாரியாக தாக்கினர். தகவல் அறிந்த மகேந்திரமங்கலம் காவல்துறையினர் இருவரையும் விசாரணைக்காக காவல்நிலையம் அழைத்துச் சென்றனர்.
இதையடுத்து, காவல்நிலையத்தையும் பொதுமக்கள் முற்றுகையிட்டனர். மாணவியிடம் தவறாக நடக்க முயற்சித்த ஆசிரியர்களை தூக்கிலிட வேண்டும் என்றும் முறையிட்டனர். பாலக்கோடு டிஎஸ்பி சீனிவாசன் மற்றும் காவல்துறையினர், தவறு செய்த ஆசிரியர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுமக்களை சமாதானப்படுத்தினர். இதையடுத்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதுகுறித்து தர்மபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முத்துக்கிருஷ்ணனிடம் கேட்டபோது, ''புகாருக்குள்ளான ஆசிரியர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும். அவர்கள் மீது தவறு இருக்கும்பட்சத்தில் கண்டிப்பாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.
இந்த சம்பவம், மகேந்திரமங்கலம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.