அன்றாடத் தேவைகளுக்கு வழங்கப்படும் குடிநீர் வசதி அதிக உவர்ப்புத்தன்மைக் கொண்டதாகவும், பயன்பாடுக்கு உகந்ததல்ல என்பதாலும் சீவலப்பேரி ஆற்றுநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீரை தங்கள் ஊராட்சிகளுக்கு வழங்கிட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர் தூத்துக்குடி மாவட்டம் மேலத்தட்டபாறை பகுதி மக்கள்.
தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியம் மேலத்தட்டபாறை ஊராட்சிக்கு உட்பட்ட கேம்ப் தட்டப்பாறை , மேலத்தட்டபாறை, எஸ்.எஸ். காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களில் சுமார் 650க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மேலும் இங்கு அரசு சிறுவர் சீர்த்திருத்தப்பள்ளி, இரயில் நிலையம், காவல்நிலையம், அரசு பள்ளிகள் போன்ற பல அரசு அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு உள்ள பொதுமக்கள் மானாவாரி விவசாய தொழில் மற்றும் கால்நடை வளர்ப்பு தொழில்களை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த மேலத்தட்டபாறைப் பகுதி மக்கள் மனு ஒன்றினை அளித்துள்ளனர். அதில்., " தற்போது மேலத்தட்டபாறை, கேம்ப் தட்டப்பாறை,எஸ்எஸ் காலனி, செட்டியூரணி ஆகிய கிராமங்களுக்கு தேவையான குடிநீர் வசதியினை உமரிக்கோட்டையில் உள்ள கிணற்றில் இருந்து பம்பிங் செய்து வழங்கி வருகின்றனர். அவ்வாறு வழங்கப்படும் நீரானது அதிக உப்புத்தன்மை உடையதாகவும், பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தகுதியற்ற நிலையில் வருகிறது.அவ்வாறான நீரும் நான்கு நாட்களுக்கு ஒரு முறை தான் வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மட்டுமின்றி அரசுதுறை நிர்வாகத்தினரும், கால்நடைகளும் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். இதனால், சீவலப்பேரி ஆற்றுநீர் திட்டத்தின் கீழ் செல்லும் குடிநீர் குழாயானது அருகில் உள்ள எஸ்.கைலாசபுரம் கிராமத்தின் வழியாகவே செல்கிறது. அவ்வாறு செல்லும் ஆற்றுக் குடிநீரினை மேலத்தட்டபாறை, உமரிக்கோட்டை ஆகிய ஊராட்சி பகுதிகளுக்கு வழங்கிடவும், மேற்படி கிராமப்புற பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை கவனத்தில் கொண்டு உடனடியாக ஆற்றுநீர் வசதி ஏற்படுத்தி தரவும்,பற்றாக்குறையின்றி தினசரி குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்." என்கின்றனர் ஊர் பொதுமக்கள்.