உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு தமிழக அரசு சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த சிறப்பு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அதன் பிறகு கலைவாணர் அரங்கத்தில் வைக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளால் படைக்கப்பட்ட கலைப்பொருட்கள், கைவினைப்பொருட்களை பார்வையிட்டார். அதன் பிறகு விழா மேடையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், “பிறவியில் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், பின்னர் ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும், விபத்தின் காரணமாக ஏற்பட்ட குறைபாடாக இருந்தாலும் பாதிக்கப்பட்டிருக்கக் கூடியவர்களை சிறப்பு கவனம் செலுத்தி கவனிக்க வேண்டும்.
அவர்கள் உடல் குறைபாடானது. ஆனால், உள்ளக்குறைபாடு அல்ல; அறிவு குறைபாடு அல்ல; திறன் குறைபாடு அல்ல என்பதை அனைவரும் உணர்ந்து அவர்களை மதிக்க வேண்டும். இந்த அரங்கத்திற்கு வருவதற்கு முன்பு கண்காட்சி வைக்கப்பட்டிருக்கிறது. அதை நீங்கள் எல்லாம் பார்த்திருப்பீர்கள். நானும் பார்த்துவிட்டு தான் வருகிறேன். மாற்றுத்திறனாளிகளின் திறமையால் உருவாகி இருக்கக்கூடிய பொருட்களை அங்கே விற்பனைக்கு வைத்திருக்கிறார்கள். அவர்களது பெற்றோர்களும், உறவினர்களும், நண்பர்களும், இந்த சமூகமும், அரசும் உரிய மரியாதையோடு நடத்திட வேண்டும். அதற்கான உறுதியை நாம் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
சமூகத்தில் மற்ற தரப்பினர் அடையக்கூடிய அனைத்து வசதி, வாய்ப்புகளையும் மாற்றுத்திறனாளிகளும் பெற்றிட வேண்டும். சென்னை மெரினா கடற்கரையில் கால் நனைக்க மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு செய்து கொடுத்த ஏற்பாட்டை அனைவரும் அறிவீர்கள். நமது ஈரமான மனதின் காரணமாக மட்டுமல்ல, மாற்றுத்திறனாளிகளின் உரிமை என்று கருதி நாம் உருவாக்கிய அந்தப் பாதை தான் அன்பு பாதை. அதில் சென்று கடலில் கால் வைத்த போது மாற்றுத்திறனாளிகள் மன மகிழ்ச்சியால் திளைத்ததை நானும் பார்த்துத் திளைத்தேன். அது மிகப்பெரிய செலவு பிடிக்கும் திட்டமல்ல. ஆனால், அதனால் விளையும் பயன் என்பது எத்தனை கோடிகள் செலவு செய்தாலும் கிடைக்க முடியாத மகிழ்ச்சி என்பதை நீங்கள் மறக்கக்கூடாது.
பிறந்ததிலிருந்து இதுவரை கடலில் கால் நனைத்திடாத ரஞ்சித் குமார் அலைகடலில் கால் நனைத்து மகிழ்ந்த காட்சியை நானும் தொலைக்காட்சியில் பார்த்தேன். ஒவ்வொரு தனி மனிதருக்கும் நன்மை அளிக்கும் அரசாக நாம் செயல்படுவோம் என்று ஆட்சி அமைந்த நேரத்தில் நான் எடுத்துச் சொன்னேன். அதற்கு இவைகள் எல்லாம் சாட்சியாக அமைந்திருக்கிறது. உலக மாற்றுத்திறனாளிகள் நாளான இன்று ஒரு நல்ல அறிவிப்பை வெளியிடுவதில் நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன். வருவாய்த்துறை மூலம் ஓய்வூதியம் பெற்று வரும் கண்பார்வையற்ற மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 4 லட்சத்து 39 ஆயிரத்து 315 நபர்களுக்கு, அவர்கள் தற்பொழுது பெற்று வரும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயிலிருந்து 1500 ரூபாயாக வரும் ஜனவரி 1 ஆம் நாள் முதல் உயர்த்தி வழங்கப்படும்.
ஆடுகளை மேய்ப்பவர், ஒரே ஒரு ஆட்டை தனது தோளில் தூக்கிச் சுமந்து வருகிறார் என்றால், அந்த ஆடு நடக்க முடியாத நிலையில் இருக்கும். இதுதான் சமூக நீதி என்று எளிமையான விளக்கத்தைச் சொன்னவர் நமது கலைஞர். அத்தகைய சமூக நீதி சிந்தனையின் அடித்தளத்தில் அமைந்திருக்கும் இந்த அரசானது எப்போதும், எந்தச் சூழ்நிலையிலும் அனைத்து மக்களின் அரசாக இருக்கும்'' என்றார்.