Skip to main content

தற்காலிக ஆசிரியர்களை பணி நிலைப்பு செய்ய மறுப்பது சமூக அநீதி! ராமதாஸ்

Published on 15/07/2018 | Edited on 15/07/2018
anna

 

 தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் பணி நிலைப்பும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன என்கிறார் பாமக நிறுவனர் ராமதாஸ்.  இது குறித்த அவரது அறிக்கை:

’’மனிதனின் உழைப்பை சுரண்டிக் கொண்டு, அதற்கான அங்கீகாரத்தையும் ஊதியத்தையும் அளிக்க மறுப்பதை விட மிக மோசமான சமூக அநீதி இருக்க முடியாது. தமிழக பல்கலைக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வும் பணி நிலைப்பும் வழங்க மறுப்பதன் மூலம் அத்தகைய சமூக அநீதியை பல்கலைக்கழக நிர்வாகங்கள் இழைத்து வருகின்றன.

 

 சென்னை அண்ணா பல்கலைக்கழக கிண்டி மற்றும் குரோம்பேட்டை வளாகங்களில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் 270 பேருக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட எந்த உரிமைகளும் வழங்கப் படாததைக் கண்டித்தும், அவர்களுக்கு பணி நிலைப்பு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் கடந்த 7-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதைத் தொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகத்தின் 14 உறுப்புக்கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களின் பிரதிநிதிகள் என்னை சந்தித்து தங்களுக்கு இழைக்கப்படும் சமூக அநீதிகள் குறித்து எடுத்துரைத்தனர். அண்ணா பல்கலைக் கழகத்தில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு எவ்வாறு ஊதிய உயர்வும், பணி நிலைப்பும் மறுக்கப்பட்டு வருகிறதோ, அதேபோல், உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் 500-க்கும் மேற்பட்ட தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு அத்தகைய உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்படுகின்றன.

 

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் ஆசிரியர்களில் 25 விழுக்காட்டினர்  மட்டுமே நிரந்தர பணியாளர்கள் ஆவர். மீதமுள்ள 75% ஆசிரியர்கள் தற்காலிகப் பணியாளர்களாவர். இவர்களில் 30 விழுக்காட்டினர் முனைவர் பட்டம் பெற்றவர்கள். மீதமுள்ளவர் முதுநிலை பொறியியல் பட்டதாரிகள். அவர்கள் அனைவரும் முறையான தகுதித்தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் நியமனம் செய்யப்பட்டவர்கள். அவர்கள் 3 ஆண்டுகள் முதல் 9 ஆண்டுகளாக இதே பணியில் நீடிக்கின்றனர். 6 மாத ஒப்பந்தத்தில் நியமிக்கப்படும் இவர்களை 3 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிலைப்பு செய்ய வேண்டும் என்பது விதி. ஆனால், அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவே, ஆசிரியர்களின் 6 மாத ஒப்பந்தம் முடிவடைந்த பின்னர் அடுத்த பணி நாள் முதல் புதிய ஒப்பந்தம் வழங்காமல், ஓரிரு நாட்கள் தாமதம் செய்து விட்டு, அதன்பிறகே புதிய ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. இதன்மூலம் அவர்களில் ஒருவர் கூட தொடர்ந்து 3 ஆண்டுகள் பணி செய்யாமல் தடுக்கப்படுகின்றனர்.

 

அண்ணா பல்கலைக்கழகம் மட்டுமின்றி தமிழகத்தின் பெரும்பான்மையான பல்கலைக்கழகங்களிலும், அவற்றின் உறுப்புக் கல்லூரிகளிலும் இதேநிலை தான் காணப்படுகிறது. நிரந்தர உதவிப் பேராசிரியர்களை விட தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அதிக நேரம் பணியாற்றுகின்றனர். ஆனால், அவர்களுக்கு நியாயமான வழங்கப்பட வேண்டிய பணி நிலைப்பை பல்கலைக்கழக நிர்வாகங்கள் வழங்க மறுப்பது  மிகப்பெரிய சமூக அநீதி ஆகும். தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நிலைப்பு வழங்குவதில் ஒவ்வொரு பல்கலைக்கழகத்திலும் ஒருவிதமான அணுகுமுறை கடைபிடிக்கப்படுவதும், ஒரே பல்கலைக்கழகத்தில் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வெறு அணுகுமுறை பின்பற்றப்படுவதும் நியாயப்படுத்த முடியாதவை. 

 

சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தின் உறுப்புக் கல்லூரிகளில் தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்டவர்களை விதிகளுக்கு உட்பட்டு பணி நிலைப்பு செய்யும்படி சென்னை உயர்நீதிமன்றம் சில ஆண்டுகளுக்கு முன் ஆணையிட்டது. அதன்படி அவர்கள் பணி நிலைப்பு செய்யப்பட்டிருக்கின்றனர். அண்ணா பல்கலைக்கழகத்திலேயே கடந்த 2004-ஆம் ஆண்டு தற்காலிக உதவிப் பேராசிரியர்களாக நியமிக்கப்பட்ட 97 பேர் 2008-ஆம் ஆண்டில் பணி நிலைப்பு செய்யப்பட்டனர். இந்த முன்னுதாரணங்களை பின்பற்றி அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தகுதி வாய்ந்த தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் பணி நிலைப்பு செய்வது தான் சமூக நீதி ஆகும். ஆனால், அதை செய்ய அண்ணா பல்கலைக்கழக நிர்வாகம் தயங்குவது ஏன்? என்பது தெரியவில்லை.

 

அண்ணா பல்கலைக்கழக உறுப்புக்கல்லூரிகளின் தற்காலிக உதவிப் பேராசிரியர்களுக்கு இன்னொரு வகையிலும் சமூக நீதி மறுக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள பல்கலைக்கழகங்களின் கட்டுப்பாட்டிலுள்ள 41 உறுப்புக் கல்லூரிகள் உறுப்புக் கல்லூரிகள் அரசுக் கல்லூரிகளாக மாற்றப்படும் என்று கடந்த மாதம் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். ஆனால், இந்த பட்டியலில், அண்ணா பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் சேர்க்கப்படாதது ஏன்? என்ற வினாவுக்கு இதுவரை அரசு விடையளிக்கவில்லை.

 

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்புக் கல்லூரிகளில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்கள் அனைவரையும் அவர்களின் தகுதிக்கு ஏற்ற நிலைகளில் பணி நிலைப்பு செய்ய வேண்டும். பல்கலைக்கழகத்தின் நிதிநிலை அதற்கு இடம் தராவிட்டால் உறுப்புக்கல்லூரிகளை அரசுக் கல்லூரிகளாக மாற்றி அவற்றில் பணியாற்றும் தற்காலிக உதவிப் பேராசிரியர்களை அரசு கல்லூரி உதவி பேராசிரியர்களாகவும்,  மற்றவர்களை அண்ணா பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர்களாகவும் பணி நிலைப்பு செய்ய வேண்டும். மற்ற பல்கலைகக்கழகங்கள் மற்றும் அவற்றின் உறுப்புக் கல்லூரிகளில் ஒப்பந்த அடிப்படையில் பணி  செய்யும் அனைத்து உதவிப் பேராசிரியர்களுக்கும் அரசு இதே முறையில் சமூக நீதி வழங்க வேண்டும்.’’
 

சார்ந்த செய்திகள்