குடிநீர் தொட்டியில் பாம்பு;
குப்பைகளை குவித்து வைத்திருந்த
இரு மருத்துவமனைக்கு 14-லட்சம் ரூபாய் அபராதம்
சேலம் மாநகராட்சியில் உள்ள அஸ்தம்பட்டி மண்டலம், 13-வது கோட்டத்தில் உள்ள சண்முகா மருத்துவமனையில், இன்று காலை பொறியாளர் அசோகன் தலைமயிலான அதிகாரிகள் ஆய்வுக்கு சென்றபோது அங்கே பொது சுகாதாரம் கட்டமைப்பு ஒழுங்கில்லாமல் இருந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் கேட்டபோது அங்கிருந்த ஊழியர்கள் அதிகாரிகளை மேற்கொண்டு ஆய்வு செய்யவிடாமல் தடுத்துள்ளனர்.
இதையடுத்து, மாநகராட்சி ஆணையாளர் ரெ.சதீஸ் அவர்களுக்கு தகவல் கொடுத்துள்ளனர். இதையடுத்து, ஆணையாளர் தலைமையிலான அதிகாரிகள் குழுவினர் அஸ்தம்பட்டி-ஐந்துரோடு சாலையில் உள்ள சண்முகா மருத்துவமனையில் அதிரடியாக நுழைந்து ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, நோயாளிகள் குடிப்பதற்கு பயன்படுத்தும் தண்ணீர் இருந்த மூன்று தொட்டிகளில் புழுக்கள் மிதந்து கொண்டிருந்தது. ஒரு தொட்டியில். கொடிய விஷமுடைய விரியன் பாம்பு ஒன்றும் உயிருடன் இருந்துள்ளது. அங்கிருந்த ஐந்து தொட்டிகளையும் ஆய்வு மேற்கொண்டு அதிகாரிகள் குடிநீரை முறையாக பராமரிக்க மருத்துவமனை நிர்வாகத்தின் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.
மேலும், மருத்துவமனை வளாகத்தில் மூன்று டன் எடைக்கும் அதிகமான மருத்துவ கழிவுகள் ஒரு திறந்தவெளி இடத்தில் குவித்து வைக்கப்பட்டிருந்தது. அதுபோலவே உணவு கழிவுகள் மருதுவமனையின் பின்புறம் இருந்த ஒரு ஓடையில் குவிந்து கிடந்துள்ளது.
இந்த இடங்களில் எல்லாம் கொசுக்களும், கொசு உற்பத்தியாவதற்கு ஏற்ற கொசு முட்டைகளும் நிறைந்து இருந்துள்ளது.
இதையடுத்து, மருத்துவமனையை ஒழுங்காக பராமரிக்காத மருத்துவமனை நிர்வாகத்துக்கு மாநகராட்சி ஆணையாளர் சதீஸ் பத்து லட்சம் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார். 15-வது கோட்டத்தில் உள்ள சரஸ்வதி மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள், மருத்துவமனை வளாகத்தில் இருந்த பிளாஸ்டிக் தொட்டிகள், வாளிகள், பழைய கார் மற்றும் லாரி டயர்களில் ஏராளமான தண்ணீர் தேங்கியிருந்ததையும், அவற்றில் ஏராளமான கொசுக்கள் மற்றும் புழுக்கள் இருந்ததையும் கண்டனர்.
இதையடுத்து, மருத்துவமனையை சுகாதாரமான முறையில் பராமரிக்காத மருத்துவமனை நிர்வாகத்துக்கு நான்கு இலட்சம் ரூபாய் அபராதம் விதித்தனர். அந்த மருத்துவமனைக்கு வழங்கப்பட்டிருந்த குடிநீர் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.
சேலத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ள செய்தி மாநிலத்தின் பல இடங்களில் உள்ள மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
- பெ.சிவசுப்ரமணியம்