தமிழகத்தில் கடந்த ஒருமாதமாக நடைபெற்று வந்த உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையோடு நிறைவடைந்தது. அரசியல் கட்சியினர் கடந்த ஒரு வாரமாக தீவிர பிரச்சாரம் செய்து வந்தார்கள். இந்நிலையில் வாக்குப்பதிவு நாளான நாளை தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு செய்யப்பட்டுள்ளது. 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
இதற்கிடையே வாக்கு எண்ணும் மையங்களை மாநில தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி மாவட்ட நிர்வாகங்கள் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில் கோபிசெட்டிபாளையம் வைரவிழா மேல்நிலைப்பள்ளியில் வாக்கு எண்ணும் பணிக்காக முன்னேற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், அங்கிருந்த மர பலகையில் இருந்து நான்கு அடி நீள சாரைப்பாம்பு வெளியே வந்ததது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து கத்தினார்கள். பிறகு அங்கிருந்த சிலர் நீண்ட கம்பியை கொண்டு அந்த பாம்பை பிடித்தனர். இதனால் அங்கிருக்கும் ஊழியர்கள் அச்சத்துடனே பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.