கள்ளக்குறிச்சி மாவட்டம் கச்சராபாளையம் அருகே உள்ளது எடுத்தவாய்நத்தம் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் 35 வயது விவசாயி செந்தில். அவருக்கு சொந்தமான விளைநிலத்தில் மரவள்ளி கிழங்கு பயிர் செய்து வந்துள்ளார். அதை பார்ப்பதற்கும் அதற்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு உரம் இடுவதற்கு அவ்வப்போது அந்த இடத்துக்கு சென்று வருவார்.
அதன்படி வழக்கம் போல் நேற்று காலை மரவள்ளிக்கிழங்கு பயிரிட்டுள்ள நிலத்தைப் பார்ப்பதற்கு சென்றுள்ளார். அங்கு இரண்டு மலைப்பாம்புகள் ஊர்ந்து கொண்டு இருந்ததை பார்த்து பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக இதுகுறித்து கள்ளக்குறிச்சி தீயணைப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளார். அவரது தகவலின் பேரில் நிலைய அலுவலர் கண்ணன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் நாகேஸ்வரர், மணி ஆகியோர் நேற்று காலை 11 மணியளவில் செந்திலின் மரவள்ளிக்கிழங்கு தோட்டத்திற்கு சென்றனர்.
அங்கு ஊர்ந்து கொண்டிருந்த இரண்டு மலைப்பாம்புகளையும் லாவகமாக பிடித்தனர். ஒவ்வொரு பாம்பும் ஏழு அடி நீளமும் 25 கிலோ எடை கொண்டது. உயிருடன் பிடிக்கப்பட்ட அந்த மலைப்பாம்புகளை கல்வராயன் மலை பகுதியை சேர்ந்த வனத்துறை அதிகாரிகளை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்தனர். அந்த இரண்டு மலைப்பாம்புகள் கல்வராயன் மலைப் பகுதிக்கு எடுத்துச் சென்று விடுவதற்கு வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.