கடந்த 2001 ஜுலை 11ம் தேதியன்றே கடல் அட்டை, கடல் குதிரை, கடல் பசு உள்ளிட்ட 53 வகையான கடல்வாழ் உயிரினங்களை பிடிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தடை விதித்தாலும் ஆண்மைக்கு உகந்தது என்பதால் கடல் அட்டைக்கான தேவை இன்று வரை இருப்பதால் அதற்காக கடத்தலும் தொடர்கின்றது. அந்த வகையில், இலங்கைக்கு கடத்த இருந்த 3 டன் கடல் அட்டைகளுடன் கடத்தல்காரர்கள் இருவரை கைது செய்துள்ளனர் ராமேஸ்வரம் வனத்துறைத்துறையினர்.
ஆண்மையை அதிகரிக்கவல்லது என சீனா, மலேசியா, சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளில் உள்ள மக்களுக்கு கடல் அட்டை வரப்பிரசாதமான ஒன்று. வழுவழுப்பான தோலை உடையதும், நீண்ட உருளை வடிவில் வெள்ளரி போன்றும் இருக்கும் கடல் அட்டை முட்தோலி வகையைச் சேர்ந்த கடல்வாழ் உயிரினமே. கடலின் ஆழப்பகுதியில் வாழும் இக்கடல் அட்டையை வேட்டையாடுவதெற்கென மீனவர்களும் ராமநாதபுரம் மாவட்டத்தில் உண்டு. தங்கம் கடத்தலுக்கு இணையாக தடைவிதிக்கப்பட்ட இந்த கடல் அட்டையை கடத்துவோர் இங்கு அதிகம் என்பதால் வனத்துறையும் கண்ணில் விளக்கெண்ணெய் விட்டு கடத்தலை தடுப்பதும் வாடிக்கையான ஒன்று.
இந்நிலையில், மன்னார் வளைகுடா கடல் பகுதியில் இருந்து சர்வதேச கடல் எல்லை வழியாக இலங்கைக்கு கடல் அட்டை கடத்தப்படுவதாக மண்டபம் வனத்துறை வனச்சரகர் வெங்கடேஷிற்கு கிடைத்த ரகசிய தகவலையடுத்து இன்று அதிகாலை முதல் மன்னார் வளைகுடா கடல் பிராந்தியத்தில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மண்டபம் தெற்கு கடற்கரை பகுதியில் அமைந்துள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே கடலில் சந்தேகத்துக்கு இடமாக நின்று கொண்டிருந்த நாட்டு படகை சோதனை செய்ய முயன்ற போது, இருவர் படகில் இருந்து கடலில் குதித்து தப்பிக்க முயற்சித்தனர். தப்பிய வேதாளை பகுதியை சேர்ந்த சாகுல் ஹமீது மற்றும் கருப்பையா ஆகிய இருவரையும் மடக்கி பிடித்த வனத்துறையினர் நாட்டு படகை சோதனையிட, படகில் 261 மூடைகளில் 3,200 கிலோ எடை கொண்ட பதப்படுத்தப்படாத கடல் அட்டைகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கடத்தல்கார்களுடன் கடல் அட்டைகளையும் அட்டைகளையும் கைப்பற்றியவர்கள், நாட்டுபடகையும் பறிமுதல் செய்து மண்டபம் வனத்துறை அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட கடல் அட்டை மற்றும் படகின் மதிப்பு 40 லட்சம் இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்ததையடுத்து இப்பகுதியில் பரப்பரப்பு நிலவி வருகின்றது. அதே வேளையில், ஆண்மைக்கு பயன்படும் மருந்தான கடல் அட்டையை கடத்தியது தப்பா..? சாபத்தை வாங்காதீங்க சார்.! என கடத்தல்காரர்கள் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.