திருச்சி முக்கொம்பு பகுதியில் உள்ள பெருகமணி ஊராட்சியில், மொத்தம் ஒன்பது வார்டுகள் உள்ளன. இதன் தலைவராக திமுகவைச் சேர்ந்த கிருத்திகா அருண்குமாரும், துணைத்தலைவராக மணிமேகலை என்பவரும் உள்ளனர்.
இந்நிலையில், வார்டு உறுப்பினர்களில் அழகேஸ்வரி, தனலட்சுமி, சந்திரசேகர், மகேஷ்குமார், சரஸ்வதி, செந்தில்குமார் ஆகிய 6 வார்டு உறுப்பினர்களும் அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய ஆணையர் சீனிவாசனிடம் தங்களது உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக கடிதம் ஒன்றை அளித்துள்ளனர்.
அந்தக் கடிதத்தில் அவர்கள் கூறியிருப்பது, “கடந்த இரண்டு ஆண்டுகளாக எங்களுடைய வார்டில் எந்தவித அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்படவில்லை. மேலும், ஊராட்சி மன்றத் தலைவர், துணைத் தலைவர் ஆகியோர் இடையே எழும் குற்றச்சாட்டுக்கள் குறித்து நடவடிக்கை எடுக்க கோரினோம். ஆனால், இதுநாள்வரையிலும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
நாங்கள் தற்போது வசித்து வரும் எங்களுடைய வார்டு பகுதியில் உள்ள பொதுமக்கள் தொடர்ந்து தங்களுடைய குறைகளை எங்களிடம் கூறுகிறார்கள். ஆனால் அதை சரி செய்ய முடியாமல் நாங்கள் விழிபிதுங்கி நிற்கிறோம். அவர்களுக்கும் எங்களால் எந்தவித பதிலும் கூற முடியாத நிலையில் எங்களுடைய இந்தப் பதவியை நாங்கள் ராஜினாமா செய்கிறோம்” என்று தெரிவித்துள்ளனர். ஒரே நேரத்தில் 6 வார்டு உறுப்பினர்கள் ராஜினாமா செய்தது தற்போது பெருகமணி ஊராட்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.