செங்கல்பட்டு மாவட்டம், கேளம்பாக்கத்தில் உள்ள சுஷில் ஹரி சர்வதேச பள்ளியின் நிறுவனர் சிவசங்கர், ஆன்மீகவாதி என்ற போர்வையில் மாணவிகளைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியது குறித்து அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் பரபரப்பு குற்றச்சாட்டுகளை எழுப்பினர்.
சிவசங்கர் பாபா மீதான புகார்கள் குவிந்த நிலையில், இது தொடர்பாக அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதன் பிறகு இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டது. நேற்று (16/06/2021) டெல்லியில் கைது செய்யப்பட்ட சிவசங்கர் பாபா, நள்ளிரவே சென்னை அழைத்து வரப்பட்டார்.
எழும்பூரில் உள்ள சி.பி.சி.ஐ.டி தலைமை அலுவலகத்தில் வைத்து நேற்று (16/06/2021) இரவு முழுவதும் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டது. தொடர்ந்து 10 மணி நேரம் அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீதிமன்றக் காவலுக்காக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தும் நடவடிக்கையில் சி.பி.சி.ஐ.டி போலீசார் இறங்கியுள்ளனர். அதன் முதற்கட்டமாக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு சிவசங்கர் பாபாவை அழைத்துச் சென்று மருத்துவப் பரிசோதனை செய்தனர்.
இதையடுத்து, செங்கல்பட்டு மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் சிவசங்கர் பாபாவை சி.பி.சி.ஐ.டி. போலீசார் தற்போது ஆஜர்படுத்தினர். அப்போது சிவசங்கர் பாபாவை காவலில் எடுத்து விசாரிக்க சி.பி.சி.ஐ.டி. தரப்பு வழக்கறிஞர் கோரியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.