சிதம்பரம் நடராஜர் கோயிலில் சிற்றம்பல மேடையில் ஆறு நாட்கள் தொடர்ந்து தேவாரம் திருவாசகம் ஓதுதல் நிகழ்ச்சி தெய்வ தமிழ் பேரவை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் நாளான திங்கள் கிழமை நேற்று காலை தெய்வத்தமிழ் பேரவையினர் தேனி மாவட்டம், குச்சனூர் வடகுரு மடாதிபதி, ராஜயோக சித்தர்பீடம் குச்சனூர் கீழார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட சிவனடியார்கள் மற்றும் பக்தர்கள் கீழவீதி தேரடியில் இருந்து ஊர்வலமாக தேவாரம் திருவாசகம் பாடிக்கொண்டு சிவ வாத்தியங்கள் முழங்கியபடி கோயில் சிற்றம்பல மேடைக்கு செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறை ஏ.டி.எஸ்.பி. அசோக்குமார் தலைமையிலான காவல்துறையினர் தடுத்து நிறுத்தினார்கள்.
அதனால், அவர்கள் தரையில் அமர்ந்து தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், காவல்துறையை கண்டித்தும் முழக்கங்களை எழப்பினர். அதனையடுத்து போலீசார், 50க்கும் மேற்பட்ட சிவனடியார்களை கைது செய்தனர். இதுகுறித்து தெய்வத் தமிழ் பேரவை ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “ஆண்டாண்டு காலமாக சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் தேவாரம் திருவாசகம் பாடி வந்தனர். பக்தர்கள் சிற்றம்பல மேடையில் ஏறி சாமி தரிசனம் செய்து வந்தனர். இதற்கு தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது. தமிழக அரசு இந்த விஷயத்தில் கவனம் செலுத்தி தனி சட்டம் இயற்றி கோயிலை அரசுடைமையாக்க வேண்டும். யார் தடுத்தாலும் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம் பாடுவதில் உறுதியாக உள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தெய்வத்தமிழ் பேரவை அறிவிப்பையொட்டி கீழ வீதி பகுதியில் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பின்னர் இதே கோரிக்கையை வலியுறுத்தி காந்தி சிலை அருகே மக்கள் உரிமைக்கான கூட்டமைப்பு சார்பில் 10க்கும் மேற்பட்ட சமூக அமைப்புகள் நிர்வாகிகள் கலந்து கொண்ட கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திராவிடர் விடுதலை கழகம் கொளத்தூர் மணி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் நிலவழகன், தமிழ் மண் தன்னுரிமை இயக்கம் பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.