கிராமப் பகுதிகளில் உள்ள தொடக்கப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்து வருகிறது. அதே வேளையில் தனியார் பள்ளிகளின் மீது பெற்றோர்களுக்கு மோகம் அதிகரித்துள்ளது. பெரும்பாலான கிராமங்களுக்கு தனியார் பள்ளிகளின் வாகனங்கள் வருவது பெற்றோர்களிடையே அப்பள்ளியின் மீதான ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகரான கட்டமைப்பு வசதிகளை அரசுப் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்கிற ஆர்வம் தற்போது கிராமப்புறங்களில் ஏற்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே உள்ள மாரப்பம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. தற்போது 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள இப்பள்ளியில் 2023-2024ம் கல்வி ஆண்டில் புதிதாக சேரும் மாணவ மாணவியருக்கு ஊர்ப்பொதுமக்கள் சார்பில் இலவசமாக சைக்கிள் வழங்க உள்ளதாகவும், வீட்டிலிருந்து பள்ளிக்கு வர வாகன ஏற்பாடுகள் செய்து தருவதாகவும் போஸ்டர்கள் அச்சிட்டு விளம்பரப்படுத்தியுள்ளனர்.
இது குறித்து ஊர்ப்பிரமுகர்களிடம் கேட்டபோது, "சுமார் 50 ஆண்டுகளைக் கடந்த இந்த அரசு பள்ளியில் தரமான கல்வி, கட்டட வசதி, சுகாதாரமான உணவு, சுத்தமான குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இருந்தபோதும் நாளுக்கு நாள் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. பழமையான எங்கள் ஊர் பள்ளியில் வரும் கல்வி ஆண்டில் அதிக எண்ணிக்கையில் மாணவர்களை சேர்த்து பள்ளியின் கட்டமைப்பை மேம்படுத்த ஸ்மார்ட் போர்டு போன்ற வசதிகளை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம்" என்று தெரிவித்தனர். ஊர்மக்களின் இந்த அறிவிப்பை பொதுமக்கள் ஆச்சரியத்துடன் பார்த்து செல்கின்றனர்.