வீட்டிலுள்ள அனைவரும் வெளியூர் சென்றிருந்த நிலையில், வீட்டுக் கதவினை உடைத்து திருட முயன்ற திருடனை சிறைப்பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர் தெருவாசிகள்.
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஆனந்தா நகர் பகுதியில் வசிப்பவர் அமல்ராஜ் கென்னடி. இவர் அருகிலுள்ள ஜெயங்கொண்டத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சம்பவத்தன்று வீட்டைப் பூட்டிவிட்டு மனைவி சகாயமேரியுடன் தனது பள்ளி ஆண்டுவிழாவிற்கு சென்றிருக்கையில், இரவு 7 மணியளவில் தன் வீட்டிலுள்ள சிசிடிவி திருப்பி வைக்கப்பட்டிருப்பது தன்னுடைய மொபைல் மூலம் தெரியவந்திருக்கின்றது.
சந்தேகமடைந்த தலைமையாசிரியர் தன்னுடைய மொபைலின் துணைகொண்டு சிசிடிவி-யை ரீவைண்ட் செய்து பார்க்கையில், யாரோ ஒரு நபர் தனது வீட்டுக்கதவினை உடைத்ததும், சிசிடிவியை திருப்பி வைப்பதும் தெரியவர அங்கிருந்த படியே, தன்னுடைய பக்கத்து வீட்டுக்காரருக்கு தகவல் கொடுத்திருக்கின்றார். பக்கத்து வீட்டுக்காரர்கள் உள்ளிட்ட தெருவாசிகள் ஆசிரியரின் வீட்டிற்கு சென்று கதவு உடைத்திருப்பதனை அறிந்து வெளியில் இருந்தபடியே, திருடனை உள்ளே வைத்து பூட்டிய பின்பு, காரைக்குடி வடக்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். காவல்துறையினரும் உடனே வந்து வீட்டிற்குள் நுழைந்து திருடனை பிடித்து விசாரிக்கையில், அவனது பெயர் ராபின் எனவும், நாகர்கோவில் பகுதியை சேர்ந்தவன் எனவும், அவன் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதும் புலனாகியுள்ளது. ஆசிரியரின் சமயோசிதத்தால் திருடன் அகப்பட்ட சம்பவத்தை எண்ணி சிலாகிக்கின்றனர் தெருவாசிகள்.