சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் பதவிகளுக்கு எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பது குறித்து விளக்கமளிக்க மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் 5- ஆம் தேதி நடந்த உள்ளாட்சி தேர்தலில், சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்திற்கு 16 வார்டு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த உறுப்பினர்களைக் கொண்டு, தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்வு செய்யப்படுவர். ஆனால், போதுமான அளவுக்கு உறுப்பினர்கள் வராததால், தேர்தல் தொடர்ந்து தள்ளிவைக்கப்பட்டு வந்துள்ளது.
இதையடுத்து, சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவிகளுக்கான தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி, செந்தில் குமார் உட்பட 8 உறுப்பினர்கள், சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளின்படி, மாவட்ட பஞ்சாயத்துக்கு தலைவர், துணைத்தலைவர் தேர்தல் நடத்தக் கோரி மாநில தேர்தல் ஆணையத்துக்கு மனு அனுப்பியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன் குற்றம் சாட்டினார்.
இதற்குப் பதிலளித்த தேர்தல் ஆணையம் தரப்பு வழக்கறிஞர் நெடுஞ்செழியன், இதுசம்பந்தமாக மாநில அரசைக் கலந்தாலோசித்து தெரிவிக்க அவகாசம் வேண்டுமென கோரிக்கை வைத்தார். தேர்தல் ஆணையம் ஒரு சுதந்திரமான அமைப்பு என்பதால், தமிழக அரசுடன் ஆலோசிக்க வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய நீதிபதி, சிவகங்கை மாவட்ட பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தல் எப்போது நடத்தப்படும் என, நவம்பர் 10- ஆம் தேதி விளக்கமளிக்க, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையைத் தள்ளிவைத்தார்.