கரோனா வைரஸ் தொற்றைக் காரணம் காட்டி குறிப்பிட்ட பகுதியிலுள்ள மக்களுக்கு தி.மு.க.வினர் நிவாரணப் பொருட்கள் வழங்கினால், அடுத்த நாள் அதே பகுதிக்குச் சென்று, அதே மக்களுக்கு தன் பங்கிற்கு நிவாரணப் பொருட்களை அ.தி.மு.க.வும் வழங்கி வருகின்றது. இந்த நிவாரணப் பொருட்கள் வழங்குதல் போட்டி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் நடைபெறுவதால் தொகுதியில் அரசியல் களைக்கட்டியது.
2018- ஆம் ஆண்டின் கணக்கெடுப்பின் படி 1,36,241 ஆண் வாக்காளர்களும், 1,39,783 பெண் வாக்களர்களுமாக, திருநங்கைகள் சேர்த்து மொத்தமாக 2,76,031 வாக்காளர்களைக் கொண்டது சிவகங்கை மாவட்டத்திலுள்ள திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதி. பொதுவாக விவசாயம் சார்ந்த தொகுதியாக இருப்பினும் கயிறு திரிக்கும் தொழிலும், செங்கல் காளவாசலும் இங்கு மிகுந்த வருவாயைக் கொடுக்கின்றது.
முதலில் திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியாக இருந்து, திருக்கோஷ்டியூர் தொகுதியாக மாறிய இத்தொகுதி பின்னாளில் மீண்டும் திருப்புத்தூர் தொகுதியாக மாறியது. திருப்புத்தூர் தாலுகாவும், காரைக்குடி தாலுகாவிலுள்ள கானாடுகாத்தான், பள்ளத்தூர் மற்றும் கோட்டையூர் உள்ளிட்ட மூன்று பேரூராட்சிகளையும் கொண்ட இத்தொகுதியில் கடந்த 2006 தொடங்கி 2011 மற்றும் 2016- ஆம் ஆண்டுகளில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் வென்று தொடர்ச்சியாக மூன்று வெற்றிகளைப் பெற்று எம்.எல்.ஏ-வாக இருப்பது தி.மு.க.வினை சேர்ந்த பெரியகருப்பன்.
ஆனால், இந்த முறை இத்தொகுதியினை தி.மு.க.விற்கு விட்டுவிடக் கூடாது என்பதற்காக அ.தி.மு.க. தரப்பு தேர்தல் பணிகளை முன்கூட்டியே துவக்கியுள்ளது. இதற்காகவே அ.தி.மு.க.-வின் அதிகாரப்பூர்வ வேட்பாளர் தான் தான் என்பதனை அறிவிக்காதக் குறையாக தொகுதியில் முகாமிட்டு நிவாரணப் பொருட்களையும், மக்களுக்குத் தேவையான மருத்துவச் சேவைகளையும் வழங்கி வருகின்றார் நமது அம்மா நாளிதழின் ஆசிரியரும், அ.தி.மு.க. மாநிலச் செய்தி தொடர்பாளருமான மருது அழகுராஜ்.
திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காரையூர் பஞ்சாயத்து பகுதிகளுக்கு உட்பட்ட காரையூர், மாங்குடி, மணக்குடி, நாராயணமங்களம், சோழம்பட்டி, புதுவளவு பகுதிகளில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு மற்றும் சுண்டக்காடு பகுதிகளில் உள்ள மக்களுக்கும் தலா 5 கிலோ அரிசி வீதம் அரிசி பொட்டலங்கள் மற்றும் 3 கிலோ காய்கறிகளை எம்.எல்.ஏ. பெரியகருப்பன் தலைமையிலான தி.மு.க. தரப்பு வழங்கியிருக்க, தலா 5 கிலோ அரிசி, 5 கிலோ மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட தொகுப்பினர் அதே சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட உடன்பட்டி, சொக்கன்பட்டி, ஊதம்பட்டி மாதவரயான்பட்டி, ஆலம்பட்டி உள்ளிட்ட பல பகுதிளில் வழங்கியிருக்கின்றது மருது அழகுராஜ் தலைமையிலான அ.தி.மு.க. தரப்பு. இப்படியாகத் தொகுதி முழுவதும் ஏறக்குறைய 50 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்களுக்குப் போட்டி நிவாரணப் பொருட்கள் வழங்கியுள்ளது இரு கட்சியும்.
திருப்புத்தூர் தொகுதியில் தி.மு.க. பெரியகருப்பனுக்கு தான்தான் தகுதியான மாற்று வேட்பாளர் என அ.தி.மு.க.வின் மருது அழகுராஜ் போட்டிப் போட்டு தேர்தல் பணிகளை துவக்கிய வேளையில், "இந்த முறை இதே தொகுதியில் மீண்டும் பெரியகருப்பன் வெற்றிப் பெற வாய்ப்பில்லை. தொகுதிக்குட்பட்ட பல பகுதிகளில் கட்சிக்கான கட்டமைப்பே இல்லை. பெரியகருப்பனுக்கு பெரும்பான்மையான வாக்குகளைப் பெற்றுத் தரும் சாக்கோட்டை ஒன்றியத்தில் தற்பொழுது வரை மேற்கு ஒன்றியச் செயலாளர் பதவி நிரப்பப்படவில்லை. தன்னுடைய ஆதரவாளர் முக்கியமா..? கட்சி முக்கியமா..? என்றால் கட்சி தான் முக்கியம் எனத் தேர்தலை நடத்த ஒத்துழைப்பு தந்திருக்க வேண்டும். அதை விடுத்து சாக்கோட்டை மேற்கு ஒன்றியத்தில் ஒன்றியச் செயலாளர் பதவியினை தன்னுடைய ஆதரவாளர் ஒருவருக்குப் பெற்றுத் தரும் வேகத்தில் தேர்தலே நடத்த விடாமல் செய்தவருக்கு எப்படிக் கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவார்கள்..? இதுக்குறித்து தலைமைக்கும் தெரிவித்துவிட்டோம். வெறும் நிவாரணப் பொருட்கள் கொடுத்தால் வெற்றிப் பெற்று விடுவாரா என்ன..?" எனக் குமுறுகின்றனர் சாக்கோட்டை மேற்கு ஒன்றியக் கட்சியினர்.
முறையாக உட்கட்சித் தேர்தலை நடத்தி, கட்சியினர் அனைவரையும் அரவணைத்து, நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் தேர்தலைச் சந்தித்தால் மட்டுமே திருப்புத்தூர் சட்டமன்றத் தொகுதியினை தக்க வைக்கும் தி.மு.க. தரப்பு. தலைமை கவனிக்குமா..?