இசைக் கருவிகளை இயக்கி அகிலத்தையும் அசர வைக்கும் இசை மேதைகளைக் கண்டிக்கிறோம். வயதிற்கேற்ற பருவ வயதில் அவர்கள் இசைக் கருவிகளை வாசிப்பது, கையாள்வது இயல்பு. ஆனால் இந்தக் கோட்பாடுகள் அனைத்தையும் தாண்டி 9 வயது சிறுவன் அனாயாசமாக அதுவும் ஆபத்தைக் கையாள்வது போன்று ஆணிப் பலகையில் அமர்ந்து தவில் வாசித்தது தான் இசை விற்பன்னர்களைத் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறது.
நெல்லை மாவட்டத்தின் வடக்கன்குளம் தனியார் மெட்ரிக் பள்ளி ஒன்றில் 4ம் வகுப்பு பயின்று வரும் மாணவன் அரிப். இசைக் கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் கொண்ட அம்மாணவனை பள்ளியின் ஆசிரியர்களான அப்துல் ஹலீல் மற்றும் ரிச்சர்ட் ஆகியோர் அரிப்-க்கு கூடுதல் பயிற்சி அளித்து ஊக்குவித்தனர். இந்த நிலையில் ஹெல்மெட் அணிந்து வாகனத்தை இயக்கும் வகையிலான விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பள்ளியில் கூர்மையான ஆணிப் பலகையில் அமர்ந்து இரண்டு மணி நேரம் இடைவிடாமல் அசத்தலாக அரிப் தன் சக்தியையும் வயதையும் தாண்டி இசையில் சொக்கவைக்கும்படி தவில் வாசித்தது பலரைத் திகைப்பில் தள்ளியது மட்டுமல்ல ஆச்சரியக்குறி யோடு அட போட வைத்திருக்கிறது.
டூவீலர் வாகனங்களை இயக்கும் அனைவரும் தங்களின் உயிர் காக்கும் பொருட்டு கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்று போல்டாக சொல்கிறான் அரிப். இந்த ஆச்சரிய மாணவனை பள்ளியின் முதல்வர் சுடலையாண்டி உள்ளிட்ட ஆசிரியர்கள் பாராட்டினார்கள். மேலும் இந்த நிகழ்ச்சி கின்னஸில் இடம் பெறும் வகையில் லிம்கா புத்தகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
சதா சர்வ நேரமும் ஆண்ட்ராய்டு போனில் மூழ்கிக் கிடக்கும் மாணவர்கள், அரிப் போன்ற மாணவனை மாதிரி தங்களின் கவனத்தை முன்னேற்றகரமான வழிகளில் திருப்பினால் எதிர்காலம் பிரகாசமாகும்.