புதுச்சேரி அரசிடமிருந்து நவம்பர் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 05-ஆம் தேதி வரை 42 கோப்புகள் துணை நிலை ஆளுநர் ஒப்புதலுக்காக ராஜ்நிவாஸ்க்கு அனுப்பி வைக்கப்பட்டன. அதில் பல கோப்புகளுக்கு துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.
அவைகள் விவரம் வருமாறு,
புதுச்சேரி தேர்தல் துறையில் 12 துணை தாசில்தார்கள் தற்காலிகமாக நியமித்தல், ஏனாம் பிராந்தியத்தில் பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு மத்திய உள்துறைக்கு அனுப்பவேண்டிய பட்டியல், முதியோர் மற்றும் ஆதரவற்ற பெண்கள் 1,54,747 பேருக்கு நவம்பர் மாதத்திற்கான உதவித் தொகையாக ரூபாய் 29.65 கோடி வழங்குதல், ஊர்க்காவல் படை வீரர்களிலிருந்து வருவாய்த்துறையில் கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்புதல், 2020-21-ஆம் நிதியாண்டில் முதல் மற்றும் இரண்டாவது கால் ஆண்டுகளுக்கு மோட்டார் வாகன வரி விலக்கு அளித்தல் (அதன் மூலம் ஏற்படும் ரூபாய் 21 கோடி வருவாய் பற்றாக்குறையை வேறு வழிகளில் வசூலிக்க கூறப்பட்டுள்ளது),
புதுச்சேரி மற்றும் காரைக்கால் மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை கணினி அறிவியல் பாடப் புத்தகங்கள் ரூபாய் 10.404 லட்சத்தில் வாங்கியதற்கான செலவினம், மூன்று மாத இலவச அரிசிக்கு பணம் வழங்குதல், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மதுபானங்களுக்கு கோவிட் வரி இரண்டு மாதங்களுக்கு நீட்டித்தல் உள்ளிட்ட கோப்புகளுக்கு கிரண்பேடி அனுமதி அளித்துள்ளார்.
மேலும் புதுச்சேரி அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் சட்ட மசோதாவுக்கு (இடப்பகிர்வு) விரைவில் அனுமதி தர மத்திய உள்துறைக்கு நினைவூட்டும் கோப்பு, தனியார் சுயநிதி மருத்துவ மற்றும் துணை மருத்துவ கல்லூரிகளில் 50 சதவீத இடங்களை புதுச்சேரியில் நடைமுறையிலிருக்கும் இட ஒதுக்கீடு அடிப்படையில் நிரப்புவதற்கான கோப்பு ஆகியவற்றுக்கும் கிரண்பேடி ஒப்புதல் அளித்துள்ளார்.