சீர்காழியில் தங்கம், வெள்ளி மொத்த வியாபாரியின் வீட்டில் வடமாநில கொள்ளையர்கள் புகுந்து இரண்டு பேரை கழுத்தறுத்து படுகொலை செய்துவிட்டு, கொள்ளை அடித்த சம்பவத்தில் மூன்று பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் ஒருவர் போலீசாரால் என்கவுண்டர் செய்யப்பட்டுள்ளார்.
17 கிலோ தங்கம், இரண்டு துப்பாக்கி, செல்ஃபோன்கள், கொள்ளையடித்த வீட்டிலிருந்து எடுத்துச்சென்ற ஹார்டிஸ்க் என பலவற்றையும் காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர். அதோடு கொள்ளைக்கு ஸ்கெட்ச் போட்டுக்கொடுத்த கும்பகோணத்தைச் சேர்ந்த கருணாராம் என்பவனையும் போலீஸார் கைது செய்து ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி ரயில்வே ரோட்டில் வசித்து வருபவர் தன்ராஜ். இவர், தருமகுளத்தில் நகை அடகு கடையை பகுதி நேரமாகவும், தங்கம், வெள்ளி விற்பனையை மொத்த வியாபாரமாகவும் செய்து வருகிறார். நேற்று (27 ஜன.) காலை 6 மணி அளவில் வடமாநிலத்தைச் சேர்ந்த 3 பேர் இவர் வீட்டின் கதவை தட்டியுள்ளனர். தன்ராஜ், கதவை திறந்தவுடன் அந்த மூவரும் அவரை தள்ளிவிட்டுவிட்டு உள்ளே சென்றுள்ளனர். கூரிய ஆயுதங்களோடு உள்ளே வருவதைப் பார்த்த தன்ராஜ் மனைவி ஆஷாவும் அவரது மகன் அகிலும் சத்தம் போட்டுள்ளனர். சத்தம் போடுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மர்ம நபர்கள், அவர்கள் இருவரையும் கழுத்து அறுத்துப் படுகொலை செய்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து படுக்கை அறையில் கட்டிலின் அடியில் இருந்த 17 கிலோ தங்க நகைகளைக் கொள்ளையடித்துவிட்டு வெளியே போகும்போது தன்ராஜையும் அவரது மருமகள் நெக்கல்லையும் கத்தியால் குத்தி காயப்படுத்திவிட்டு, வீட்டினுள்ளே இருந்த சி.சி.டி.வியின் ஹார்டிஸ்கை எடுத்துக்கொண்டு தன்ராஜின் காரிலேயே தப்பியோடியுள்ளனர். தகவல் அறிந்துவந்த காவல்துறையினர், படுகாயமடைந்த இருவரையும் சீர்காழி அரசு மருத்துமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.
இதுகுறித்து, சம்பவ இடத்தில் மயிலாடுதுறை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகள் தப்பிப்பதற்குப் பயன்படுத்திய கார் ஒலையாம்புத்தூர் சாலையில் நின்றுகொண்டிருப்பாதாக தகவல் கிடைத்தது. அங்கு விரைந்து சென்ற காவல் கண்காணிப்பாளர், நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏதாவது தடயம் கிடைக்கிறதா என சோதனை நடத்திக்கொண்டிருந்த நிலையில், எருக்கூர் மேலத்தெரு என்கிற இடத்தில் சந்தேகப்படும்படியான 3 நபர்கள் வயலில் அமர்ந்திருப்பதாக அந்தப் பகுதி மக்கள் காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.
சந்தேகப்படும்படியான நபரைப் பிடிப்பதற்கு போலீசார் முயற்சி செய்தனர். அப்பொழுது கையில் வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து போலீசாரையும், பொதுமக்களையும் மிரட்டி உள்ளனர். துணிச்சலாக முன்னேறிய காவல்துறையினர், அவர்களைச் சுற்றிவளைத்துப் பிடித்தனர். பிடிபட்டவர்களில் ஒருவரை காவல்துறையினர் வயல்வெளிக்கு அழைத்துச் சென்று வயலில் மறைத்து வைத்திருந்த நகைகளைப் பறிமுதல் செய்தனர்.
வயலில் பதுக்கி வைத்திருந்த நகை பையை எடுக்க மணிபால் சிங் என்ற கொலையாளியை அழைத்துச் சென்றபோது, போலீசாரை தாக்கிவிட்டு தப்பி ஓட முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டக் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா தலைமையிலான போலீஸார் என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டர் செய்யப்பட்டவரின் உடல் சீர்காழி அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டது. கொள்ளையர்களிடம் இருந்து 17 கிலோ நகைகள் பறிமுதல் செய்தனர்.
சி.சி.டி.வி. ஹார்டிஸ்கைப் பறிமுதல் செய்ததோடு மற்ற கொலைக் குற்றவாளிகளான ரமேஷ், மணிஸ் ஆகிய இருவரையும் சீர்காழி காவல் நிலையத்தில் ஐ.ஜி. ஜெயராம் விசாரணை நடத்தினார். அவரது விசாரணையில் இந்தக் கொலைக்கும், கொள்ளைக்கும் மூலக் காரணமாக இருந்தது கும்பகோணம் பகுதியில் செருப்புக் கடை வைத்திருக்கும் கருணாராம் என்பதைக் கண்டுபிடித்து, அவரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.