17வது மக்களவை தேர்தல் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்று கடந்த 23ந்தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து முடிந்து பாஜக தலைமையிலான கூட்டணி பெரும் வெற்றி பெற்று இரண்டாவது முறையாக மோடி பிரதமராக வரும் மே 30ந்தேதி பதவி ஏற்கவுள்ளார்.
இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிகள் மே 26ந்தேதியோடு விலக்கிக்கொள்ளப்படுகிறது. மே 27 ந்தேதி முதல் வழக்கமான நலத்திட்ட அறிவிப்புகள், நலத்திட்டங்கள் வழங்குவது, மக்கள் குறைகேட்பது, மூடப்பட்ட மக்கள் பிரதிநிதிகளின் அலுவலகங்கள் திறக்கும பணிகள் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
அதேபோல் தேர்தல் காலத்தில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆதரவாளர் வீட்டில் அதிகளவு பணம் கைப்பற்றப்பட்டது. இதுதொடர்பாக வழக்கு பதிவானதால் வேலூர் தொகுதி தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அது தொடர்பாக மே 26ந் தேதி மத்தியரசு, அந்த தொகுதி காலியாகவுள்ளதாக அரசிதழில் வெளியிட்டுள்ளது. இருந்தும் இந்த தொகுதிக்கும் தேர்தல் விதிமுறைகள் தளர்த்தப்பட்டுள்ளன. மே 27ந்தேதி திங்கட்கிழமை, மக்கள் குறைவு தீர்வு கூட்டம் நடைபெறும், பொதுமக்கள் வந்து மனுக்களை தரலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் எப்போது தங்களது தொகுதிக்கு தேர்தல் நடைபெறுமோ என ஏக்கத்தில் உள்ளார்கள் வேலூர் மாவட்ட பொதுமக்கள்.