கூடன்குளம் போராட்டிற்காக கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் இருக்கும் சமூக செயற்பாட்டாளர் முகிலன் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆகஸ்ட் 15 முதல் சிறையிலேயே தொடர் உண்ணாவிரப் போராட்டம் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கு முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி பாளையங்கோட்டை சிறையில் பல முறை உண்ணாவிரதம் இருந்துள்ளார். கடைசியாக தொடர்ந்து பல நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தோழர் நல்லக்கண்ணு போன்ற தலைவர்கள் கேட்டுக் கொண்டதால் போராட்டத்தை கைவிட்டார். அதன் பிறகு சிறை மாற்றப்பட்டு மதுரையில் பல வருடங்களாக பயன்படுத்தாத அறையில் அடைக்கப்பட்ட நிலையில் பல வழக்குகளில் பிணை கிடைத்தும் விடுதலை செய்யப்படாமல் புது புது வழக்குகளில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் இருந்து வருகிறார்.
போராட்டத்திற்காக முகிலன் முன் வைக்கும் கோரிக்கைகள்:
1)மே 17, திருமுருகனை உடனே விடுதலை செய் !
2)இந்திய, தமிழக அரசுகள் நாடகமாடி, கொலைகார ஸ்டெர்லைட் ஆலையை திறக்க துணை போகாதே !
3)எட்டுவழிச் சாலை என்ற பெயரில், கவுந்தி மலை – வேடியப்பன் மலையை ஜிண்டால் நிறுவனத்திற்கு தாரை வார்க்காதே !
4)கர்நாடகாவில் மேகதாது அணையை காவிரியின் குறுக்கே கட்டி, காவிரி டெல்டாவை பாலைவனமாக்க முயற்சிக்கும் இந்திய அரசின் சதியை தடுத்து நிறுத்து !
5)தேனி பொட்டிபுரத்தில் அமெரிக்காவின் செயற்கை நியூட்ரினோ கற்றையை வைத்து ஆய்வு, மதுரை வடபழஞ்சியில் அணுக்கழிவு ஆய்வு மையம், கூடங்குளம் – கல்பாக்கத்தில் அணுஉலை பூங்கா அமைத்து, தமிழகத்தை அணுக்கழிவு தேசமாக மாற்றாதே !
6)கோவையின் குடிநீர் விநியோகத்தை பிரெஞ்சு சூயல் நிறுவனத்திற்கு வழங்காதே ! பெப்சி, கோக் நிறுவனத்திற்கு தமிழக ஆறுகளை, நீர்வளங்களை தாரை வார்க்காதே ! தமிழகத்தில் ஆற்றுமணல் – கிரானைட் – தாதுமணல் கொள்ளையை தடுத்து நிறுத்து !
7)கிரானைட் கொள்ளை பற்றிய சகாயம் அறிக்கையை, தாதுமணல் கொள்ளை பற்றிய ககன்தீப்சிங் பேடி அறிக்கையை சி.பி.ஐ. விசாரித்து நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய் !
8)மதுரை – போடி அகல ரயில் பாதையை விரைந்து அமைத்திட நடவடிக்கை எடு !
9)27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் 7 தமிழகளை உடனே விடுதலை செய் !
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை ஒட்டி விடுதலை செய்வதாக அறிவித்த 10 ஆண்டுகள் தண்டனை கழித்த, மத வேறுபாடுகள் இல்லாமல் அனைத்து ஆயுள் தண்டனை சிறைவாசிகளையும் காலதாமதம் செய்யாமல் இன்றி விடுதலை செய் ! சிறைவாசிகளை மனநோயாளிகள் ஆக்காதே!
10)மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் – ஓ.என்.ஜி.சி – அணுஉலை – நியூட்ரினோ – ஆற்றுமணல் குவாரி மற்றும் அபாயகரமான சிகப்பு வகை ஆலைகளுக்கு கருத்துகேட்பு கூட்டத்தில் இருந்து விதிவிலக்கு அளித்தும், மருத்துவம்(நீட்), பொறியியல், சட்டம், வரிவிதிப்பு(GST), மின்சாரம்(உதய்), என எண்ணற்ற தமிழக அரசின் உரிமைகளை பறித்து,
இந்தியாவிற்கு அடிமை தேசமாக உள்ள தமிழ்நாட்டை கொத்தடிமை தேசமாக மாற்றாதே !
போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தனது உண்ணாவிதப் போராட்டத்தை தொடங்குவதாக தகவல் வெளியாகி உள்ளது.