திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு சிப்காட் விரிவாக்கத்திற்காக 2700 ஏக்கர் விளைநிலங்கள் சட்டத்திற்கு எதிரான முறையில் பறிக்கப்படுவதை எதிர்த்து மேல்மா என்ற இடத்தில் 125 நாட்களாகப் போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் 20 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இவர்களில் பச்சையப்பன், தேவன், அருள், திருமால், சோழன், பாக்கியராஜ், மாசிலாமணி ஆகிய 7 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் காவல்துறை கைது செய்யப்பட்டனர். இதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ், எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்தனர்.
இதையடுத்து, கைது செய்யப்பட்ட 6 பேரின் குடும்பத்தினரும் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்திருந்தனர். அதில் அவர்கள், வருங்காலங்களில் இது போன்று அரசு திட்டங்களைக் காரணமில்லாமல் எதிர்க்க மாட்டோம் என்றும், வெளியாட்களின் தூண்டுதலின் பேரில் இத்தகைய தவறை செய்யமாட்டோம் என்றும் கூறி குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தனர். அவர்கள் வைத்த அந்த கோரிக்கையை ஏற்று, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கைதான 6 பேர் மீதான குண்டர் சட்டத்தை ரத்து செய்வதாக உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து, 20 பேர் ஜாமீன் வழங்க கோரி திருவண்ணாமலை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், இது தொடர்பான விசாரணை இன்று (20-11-23) திருவண்ணாமலை நீதிமன்றத்திற்கு வந்தது. அப்போது, அந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 20 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. இதில், அருள் என்பவர் மட்டும் கிருஷ்ணகிரி நீதிமன்றத்திலும், மற்ற 19 பேரும் வேலூர் நீதிமன்றத்திலும் தினமும் கையெழுத்திட வேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது.