Skip to main content

ரசிகர்களின் கண்ணீருடன் காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம்! (படங்கள்)

Published on 26/09/2020 | Edited on 26/09/2020

 


ரசிகர்கள், பொதுமக்கள் கண்ணீர் மல்க காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க பின்னணி பாடகர் எஸ்.பி.பி.யின் உடல் தாமரைப்பாகத்தில் உள்ள அவரது பண்ணைவீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. 

 

பிரபல பின்னணிப் பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கடந்த ஆகஸ்ட் 5- ஆம் தேதி சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில், கரோனா தொற்று காரணமாக அனுமதிக்கப்பட்டார். பின் கரோனா தொற்றில் இருந்து குணமடைந்த எஸ்.பி.பி-க்கு நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டது. அதன்காரணமாக மருத்துவர்கள் எக்மோ, உயிர்காக்கும் பிற கருவிகளுடன் சிகிச்சை அளித்து வந்தனர்.  தீவிர சிகிச்சை பெற்றுவந்த நிலையில், நேற்று (25.09.2020) மதியம் 1.04 மணிக்கு சிகிச்சை பலனின்றி பாடகர் எஸ்.பி.பி. காலமானார். பொதுமக்கள் அஞசலிக்காக அவரது உடல் நுங்கம்பாக்கத்தில் இருக்கும் அவரின் இல்லத்தில் வைக்கப்பட்டது. அங்கு திரை உலகினர் அஞ்சலி செலுத்தினர். மாலை சென்னையில் மழை கொட்டியது. திரை உலக பிரபலங்களைத் தாண்டி ஏராளமான பொதுமக்கள் திரண்டு மழையையும் பொருட்படுத்தாமல் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

 

பின் மக்கள் கூட்டத்தை கட்டுபடுத்த முடியாமல் அவரது உடல் திருவள்ளூர் தாமரைப்பாக்கத்தில் இருக்கும் அவரது பண்ண வீட்டுக்கு எடுத்து செல்லப்பட்டது. அப்படி எடுத்து செல்லப்பட்டபோது ஏராளமான பொதுமக்கள் வழியெங்கிலும் அவர்களது குழந்தைகள் உட்பட குடும்பத்துடன் அவருக்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தினர். இளைஞர்கள் அவர்களின் இருசக்கர வாகனத்தில் எஸ்.பி.பி.யின் உடல் எடுத்து சென்ற வாகனத்தை பின் தொடர்ந்து சென்றனர்.

 

 

அந்த இளைஞர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இருசக்கர வாகனத்தின் ஹாரனை அழுத்தியபடியும் அவரது பாடலை பாடிக்கொண்டும் சென்றனர். சிலர் எஸ்.பி.பி.யின் உடல் சுமந்துவரும் வாகனத்தை தூரத்தில் பார்த்ததும் வானவேடிக்கைகளை வெடித்தனர். அவருக்கு இசையால் அஞ்சலி செலுத்தும் வகையில் நாதஸ்வர கலைஞர் ஒருவர் நாதஸ்வரமும் வாசித்தார். 

 

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க தலைவருமான ஸ்டாலின் எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைத்தார். அதனை தொடர்ந்து தமிழக அரசு எஸ்.பி.பி.யின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என அறிவித்தது. அதனை தொடர்ந்து அவரது பண்ணை வீட்டில் நான்கு டி.எஸ்.பிக்கள் தலைமையில் 500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அவருக்கான மரியாதை செய்யவும் காவல்துறை தயாரானது. 

 

அவரது பண்ணை வீட்டிலும் ஏராளமான பொது மக்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தினர். திரைப்பட இயக்குனர் பாரதிராஜா, நடிகர் விஜய், பாடகர் மனோ உட்பட பல திரைஉலகினர் அஞ்சலி செலுத்தினர். மேலும் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனும் அஞ்சலி செலுத்தினார். பின் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யும்போது பொதுமக்கள் அனுமதி நிறுத்தப்பட்டது. அந்தநிகழ்வில் அவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் அருகே இருந்து அவருக்கு இறுதிசடங்கு செயதனர். பின் காவல்துறையின் 72 குண்டுகள் முழங்க எஸ்.பி.பி.யின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 

 

சார்ந்த செய்திகள்