தமிழக அரசின் நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவிற்கு ஒப்புதல் தராமல் கிடப்பில் வைத்திருந்த ஆளுநர் ஆர்.என்.ரவி, அதனை நேற்று தமிழக அரசுக்கே திருப்பி அனுப்பினார். இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்களை எழுப்பி வருகின்றன. தமிழக அரசும் அனைத்து கட்சிகளுடன் நாளை ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளது. இந்த நிலையில், ஆளுநரின் செயலைக் கண்டிக்கும் விதமாக ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அக்கட்சியின் தலைவர் வேல்முருகனிடம் இது குறித்து நாம் பேசிய போது, "மோடி ஆட்சிக்கு வந்த பிறகு ஒருபுறம் தனியார்மயம் – தாராளமயம் – உலகமயம் என்ற மறுகாலனியாக்க கொள்கைகளும், வருணாசிரமக் கட்டுமானத்தை அமல்படுத்தும் பாசிச நடவடிக்கைகளையும்தான் அரங்கேற்றி வருகிறார். அதன் ஒரு பகுதியாக தான், நீட் தேர்வு, புதிய கல்விக் கொள்கை போன்றவை எல்லாம். இதனால், நீட் தேர்வை ஒன்றிய பாஜக அரசு ஒருபோதும் ரத்து செய்யாது. பாஜகவின் ஊதுகுழலாக இருக்கும் ஆளுநரும் சரி, நீதித் துறையும் சரி, வழக்கை காயப்போட்டு, மாணவர்களின் கழுத்தைக் கச்சிதமாக அறுக்கும்.
அதன் தொடர்ச்சி தான், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது. நீட் விலக்கு கோரும் தீர்மானத்தின் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்த ஆளுநர், அத்தீர்மானத்தைக் குடியரசுத்தலைவருக்கு அனுப்பி வைக்கப்படாதது, நாட்டின் அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. ஆளுநர் என்பவர் மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர். அவரால் தன்னிச்சையான முடிவு எடுக்க முடியாது. அதனைத்தான் அரசியலமைப்புச் சட்டமும் கூறுகிறது. கடந்த கால நீதிமன்றத் தீர்ப்புகளும் சுட்டிக்காட்டுகிறது.
உதாரணமாக, கடந்த 1999 -ல், நளினியின் தூக்குத்தண்டனையை ரத்து செய்யக்கோரி, கலைஞர் தலைமையிலான அரசு முடிவு செய்து, அப்போதைய ஆளுநரிடம் மனு அளிக்கப்பட்டது. அதன் மீது யாரிடமும் கருத்துக் கேட்காத ஆளுநர், அம்மனுவை திருப்பி அனுப்பினார். அதனையடுத்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் கலைஞர் தலைமையிலான அரசு வழக்கு தொடர்ந்தது. அவ்வழக்கில், ஆளுநர் தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாது, மாநில அமைச்சரவைக்கு கட்டுப்பட்டவர், அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தும் பொறுப்பு தான் ஆளுநருக்கு உள்ளது என்று நீதிமன்றம் அறிவுறுத்தியது. இதே போன்று தான், பேரறிவாளன் வழக்கிலும் உத்தரவு உள்ளது. இந்த உத்தரவு நீட் தேர்வுக்கும் பொருந்தும்.
இந்தக் கடந்த கால நீதிமன்ற தீர்ப்புகளையெல்லாம் கருத்தில் கொள்ளாத அல்லது தெரியாத ஆளுநர், தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி, அரசுக்கே திருப்பி அனுப்பி வைத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது; கண்டனத்துக்குரியது. ஆளுநரின் இத்தகையை நடவடிக்கை, அவரின் அறியாமையை தான் வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, ஏ.கே.ராஜன் குழு அளித்த பரிந்துரைகளை ஆளுநர் படித்தாரா என்பது கூட தெரியவில்லை. எனவே, நீட் விலக்கு கோரும் மசோதாவை ஆளுருக்கே மீண்டும் அனுப்ப வேண்டும். இல்லையென்றால், சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க தமிழ்நாடு அரசு விரைந்து செயல்பட வேண்டும். தமிழ்நாட்டின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் தொடர்ந்து செயல்படும் ஆளுநரை திரும்பப் பெற ஒன்றிய அரசுக்கு, தமிழ்நாடு அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும். இதனிடையே, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநரை திரும்பப் பெற வலியுறுத்தி, இன்று ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு மாபெரும் போராட்டத்தை தமிழக வாழ்வுரிமைக் கட்சி முன்னெடுக்கவுள்ளது " என்கிறார் வேல்முருகன்.