![A sickle cut for the father who wrote the property to his daughters](http://image.nakkheeran.in/cdn/farfuture/kXlEkhQ--hGs1amZadykes6jVyXt59csMM-8X_vVswM/1685026690/sites/default/files/inline-images/NM51.jpg)
கன்னியாகுமரி மாவட்டத்தில் மொத்த சொத்துகளையும் மகள்களுக்கு எழுதி வைத்த தந்தை மற்றும் தாயை மகன் வெட்டிய சம்பவம் தொடர்பாக மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள திட்டிவிளை பகுதியைச் சேர்ந்தவர்கள் பவுல்-அமலோற்பவம் தம்பதியினர். இவர்களுக்கு மோகன்தாஸ் என்ற மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். மோகன்தாஸ் வேறு மதத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதனால் அவரை ஏற்றுக் கொள்ளாத தந்தை பவுல் மொத்த சொத்துகளையும் தங்களது மகள்களுக்கு எழுதி வைத்தார்.
தனக்கு சொத்து கிடைக்கவில்லை என்ற ஆத்திரத்தில் இருந்த மோகன்தாஸ் அடிக்கடி வீட்டுக்குச் சென்று அவர்களிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். நேற்று இரவு வழக்கம் போல வீட்டுக்குச் சென்று சொத்து தொடர்பாக தாய், தந்தையிடம் பேசிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் ஆத்திரமடைந்த மோகன்தாஸ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் தாய், தந்தை இருவரையும் சரமாரியாக வெட்டினார். இதில் தாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தந்தை பவுல் வெட்டுக்காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து பூதப்பாண்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில் காவல் நிலையத்தில் மோகன்தாஸ் சரணடைந்தார். போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.