தமிழ்நாடு சீருடை பணியாளர் குழுமம் நடத்தும் 969 காலி பணியிடங்களுக்கான காவல் உதவி ஆய்வாளர்கள் தேர்வு அறிவிப்பை 2019 மார்ச் மாதம் வெளியிட்டு, ஜனவரி 12, 13 தேதிகளில் தேர்வுகள் நடைபெற்றது. இதற்கான தேர்வு முடிவுகள் மார்ச் 16 தேதி வெளியானது. இதில் ஒரே தேர்வு மையத்தில் இருந்தே அதிகமானோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
குறிப்பாக ஒரே தேர்வுமையத்தில் 969 காலிப்பணியிடங்களுக்கு ஒரே பயிற்சி மையத்தில் 144 பேர் தேர்ச்சி பெற்று பெரும் சந்தேகத்தை கிளப்பியுள்ளது. டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட தேர்வுகளில் நடந்ததைப்போல் எஸ்.ஐ தேர்விலும் முறைகேடு நடந்துள்ளதாகவும் இத்தேர்வை ரத்து செய்து மறுத்தேர்வை நடத்தவேண்டும் எனவும் கோரிக்கையை நீதிமன்றத்தில் முன்வைத்துள்ளனர்.
அதன்படி மதுரை உயர்நீதிமன்றம் 17ஆம் தேதி நிபுணர் குழு அமைத்து இத்தேர்வு நடந்த முறை சரியான முறையில்தான் நடந்ததா இல்லை தவறான முறையில் நடந்ததா என்பதை தெரிவிக்க சொன்ன நிலையில் இதுவரையில் அதைப் பற்றி எந்த தகவலும் அறிவிக்காமலே 04ஆம் தேதி அன்று திருச்சியில் எஸ்.ஐ தேர்வுக்கான உடல் தகுதி தேர்வு நடத்தப்படும் என்று தேர்வாணையம் அறிவித்துள்ளது.
இன்று எஸ்.ஐ. தேர்வில் எழுதிய மாணவர்கள் பத்திரிகையாளர்களை சந்திப்பில் இச்செய்தியை தெரிவித்தனர். மேலும் நக்கீரன் தான் இந்த எஸ்.ஐ. தேர்வு முறைகேடுகளை ஆதாரத்துடன் வெட்ட வெளிச்சமாக காட்டியது. அதற்கு எங்களது நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் இத்தேர்வின் நிபுணர் குழு தேர்வு சரியாக நடத்தப்பட்டதா என்ற தகவலை தெரிவிக்காமல் உடல் தகுதி தேர்வை நடத்தக்கூடாது என தெரிவித்தனர்.