Skip to main content

கழிவறையில் ஹைடெக் திட்டம்; விளையாடிய எஸ்.ஐ குடும்பம்

Published on 30/08/2023 | Edited on 30/08/2023

 

SI arrested for helping wife cheat in police exam

 

தமிழ்நாடு முழுவதும் கடந்த ஆகஸ்ட் 26 மற்றும் 27 ஆம் தேதி காவல்துறை உதவி ஆய்வாளர் பதவிக்கான எழுத்துத்தேர்வு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் 6 இடங்களில் இந்த தேர்வு நடைபெற்றது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சுமார் 5200 பேர் தேர்வு எழுதினர். திருவண்ணாமலை மாவட்ட தேர்வு கண்காணிப்பாளராகப் பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஐீ சத்தியபிரியா நியமிக்கப்பட்டு இருந்தார். தேர்வு அறையில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா உட்பட தேர்வில் முறைகேடுகளைத் தடுக்க பல தனிப்படைகளும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டன.

 

திருவண்ணாமலை கம்பன் கலைக்கல்லூரியில் தேர்வு எழுதினார் திருவண்ணாமலையைச் சேர்ந்த லாவண்யா. தேர்வு எழுதும்போது பாத்ரூம் செல்வதாக கூறிவிட்டு சென்றவர் சிறிது நேரம் கழித்து வந்துள்ளார். அப்போது அவர் கையோடு வினாத்தாளை கொண்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சியான தேர்வு அறை கண்காணிப்பாளர் இது குறித்து கேள்வி எழுப்பியதோடு அவரை தொடர்ந்து தேர்வு எழுத அனுமதிக்கவில்லை. இது குறித்து திருவண்ணாமலை எஸ்.பி கார்த்திகேயனுக்குத் தகவல் கூறியுள்ளனர். லாவண்யாவின் உள்ளாடைக்குள் இருந்து செல்போன் பறிமுதல் செய்துள்ளனர். எஸ்.பி நேரடியாக லாவண்யாவிடம் விசாரணை நடத்தியபோது, பாத்ரூமில் இருந்து தேர்வு வினாத்தாளை செல்போன் வாட்ஸ்அப் வழியாக வெளியே அனுப்பியதும், வாட்ஸ்அப் வழியாக வந்த பதில்களை வாங்கி வினாத்தாளில் குறித்து கொண்டதை கண்டறிந்தனர். அவரை விசாரணை வளையத்துக்குள் வைத்துக்கொண்டவர்கள் இவர் குறித்து விசாரணை நடத்தத் துவங்கினர்.

 

திருவண்ணாமலையைச் சேர்ந்த லாவண்யாவின் கணவர் சுமன் சென்னை விமான நிலைய காவல்நிலையத்தில் பாஸ்போட் ஆய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக இருப்பதும் தெரிய வந்தது. லாவண்யா யாருக்கு வாட்ஸ்அப் வழியாக கேள்வித்தாளை அனுப்பினார் என அவரது செல்போன் வாட்ஸ்அப்பில் ஆய்வு செய்தபோது, அது திருவண்ணாமலை மாவட்டம் செங்கத்தில் மருத்துவராக பணியாற்றும் கொட்டகுளம் கிராமத்தைச் சேர்ந்த ப்ரவின்குமார் மற்றும் விழுப்புரம் மாவட்டம் அவலூர்பேட்டை காவல்நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றும் சிவக்குமாருக்கு என்பது தெரியவந்தது. இவர்களை தனிப்படையினர் அழைத்து வந்து விசாரித்தபோது, இவர்கள் லாவண்யா அனுப்பிய வினாத்தாளுக்கான பதிலை கூகுளில் தேடி லாவண்யாவுக்கு அனுப்பியதாக கூறினர். இதனால் இந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

காவல் உதவி ஆய்வாளராக உள்ள சுமன், ஆயுதப்படை போலீசுக்கு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர் பின்னர் உதவி ஆய்வாளர் பணிக்கு தேர்வு எழுதி வெற்றி பெற்று திருவண்ணாமலை, விழுப்புரம் என பணியாற்றியவர் இப்போது சென்னையில் பணியாற்றுகிறார். காவல்துறை உதவி ஆய்வாளர்களுக்கு தேர்வு நடந்த அதேநாளில் தீயணைப்புத்துறை அதிகாரி பணிக்கும் தேர்வு நடந்துள்ளது. அந்த தேர்வில் கலந்து கொண்டு மனைவி தேர்வு எழுதிய அதேநாளில் இவரும் தேர்வு எழுதியுள்ளார். இதற்கு துறையில் முறையாக அனுமதி வாங்கவில்லை எனக்கூறப்படுகிறது. அது மட்டுமல்ல தேர்வு முந்தைய தினம் மனைவி தேர்வு எழுதிய கல்லூரியின் மையத்துக்கு நேரடியாக வந்து எந்த அறை தனது மனைவி தேர்வெழுதும் அறை, அங்கிருந்து கழிவறை எவ்வளவு தூரத்தில் உள்ளது என பார்த்துவிட்டு சென்றுள்ளார். சுமன், திருவண்ணாமலை நகர காவல் ஆய்வாளராக உள்ள சுபாவின் நெருங்கிய உறவினர் என்பதும் தெரியவந்துள்ளது.

 

அதேபோல் தேர்வன்று காலை தேர்வு எழுதுபவர்களை சோதனை செய்து மையத்துக்குள் அனுப்புவது வழக்கம். லாவண்யா தேர்வு அறைக்குள் செல்ல வரிசையில் நின்றவரை சோதனை செய்தபோது அங்கிருந்த ஸ்பெஷல் ப்ரான்ஞ்ச் காவல் அலுவலர் ஒருவர், அது நம்ம எஸ்.ஐ மனைவி செக் செய்யாதிங்க எனச்சொல்ல அங்கு பணியில் இருந்தவர்களும் சோதனை செய்யாமல் அனுப்பியுள்ளனர். இதனாலேயே அவரது உள்ளாடைக்குள் இருந்த செல்போன் பறிமுதல் செய்யமுடியவில்லை என்கிறார்கள்.

 

மேலும் ஒருநாளைக்கு முன்பாகவே தேர்வு நடைபெறும் இடங்களை போலீஸார் தங்களது பாதுகாப்பின் கீழ் கொண்டுவந்த நிலையில் தேர்வு மையத்துக்கு சம்பந்தம்மில்லாத எஸ்.ஐ சுமன், தனது மனைவி தேர்வெழுதப்போகும் அறை எது? அங்கிருந்து கழிவறை எங்குள்ளது? எனச்சென்று பார்த்துவிட்டு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என மனைவிக்கு சில தகவல்களை சொன்னதாக விசாரணையில் தெரியவந்துள்ளது. சுமனை உள்ளே அனுமதித்தது யார்?, சுமனுக்கு அவரது மனைவி தேர்வு எழுதப்போகும் அறை ஒருநாள் முன்னதாக தெரியவந்தது எப்படி? இதற்கு உதவியது யார்? என்கிற கேள்விகள் எழுந்துள்ளது.

 

 

சார்ந்த செய்திகள்