மன உளைச்சல் ஏற்பட்டால், காவல்துறையினர் தற்கொலை செய்துகொள்வார்கள் என்பதெல்லாம் அறிந்த விஷயம்தான். உயிரைவிட துணிபவர்கள் ஒரு ரகம். இன்னொரு ரகத்தினர் அப்படி கிடையாது. தங்கள் இஷ்டத்துக்கு எதுவும் செய்வார்கள். இதற்கு, கீழ்ப்பாக்கம் எஸ்.ஐ. துரைப்பாண்டியனை உதாரணம் காட்டலாம்.
காவல்துறையினர், தங்களின் பணி குறித்து, தினமும் பொதுக் குறிப்பேட்டில் எழுதுவர். அதாவது, ‘இன்று காலை 8 மணிக்கு நான் பந்தோபஸ்து பணிக்குச் செல்கிறேன்’ என்று விபரம் குறிப்பிட்டு எழுதுவார்கள். இந்தப் பொதுக்குறிப்பேட்டை மேலதிகாரிகள் பார்வையிடுவார்கள். கீழ்ப்பாக்கம் காவல்நிலைய எஸ்.ஐ. துரைப்பாண்டியன் என்ன எழுதினார் தெரியுமா?
‘எஸ்.ஐ. துரைப்பாண்டியன் ஆகிய எனக்கு நீரிழிவு நோய் இருப்பதால், அதன் அளவு 418 ஆக இருப்பதால், எனக்கு அவ்வப்போது மயக்கம் வந்துவிடுகிறது. இதற்காக, கனம் கீழ்ப்பாக்கம் ஏசி (ஹரிகுமார்) அவர்களிடம் மருத்துவ விடுப்பில் செல்ல வேண்டும் என்று கேட்டபோது, ‘நீங்கள் மருத்துவ விடுப்பில் சென்றால் உங்களுக்கு சார்ஜ் கொடுப்பேன்’ என்றார். அதற்காக நான் சிறுவிடுப்பு கேட்டேன். அதுவும் தரவில்லை. கடந்த 3 மாதங்களாக, நான் தொடர்ந்து, ஒருநாள் விட்டு ஒருநாள் இரவுப் பணி செய்வதால், எனக்கோ, என் வாகனத்திற்கோ, ஏதாவது நடந்தால் கீழ்ப்பாக்கம் ஏசி அவர்கள்தான் காரணம்’ என்று எழுதிவிட்டார்.
இதைப் பார்த்து, ‘மேலதிகாரிகளின் தணிக்கைக்குச் செல்லும் பொதுக்குறிப்பேட்டில், ஒரு சார்பு ஆய்வாளர், ‘சின்னப்புள்ளத்தனமா’ இப்படியா கிறுக்கிவைப்பது?’ என்று சென்னை கமிஷனர் நொந்துகொண்டாராம். சட்ட ரீதியாகப் பார்த்தால், தனது குமுறலை உரியவிதத்தில் புகாராக எழுதித்தராமல், தன் இஷ்டத்துக்கு குறிப்பேட்டில் எழுதிய எஸ்.ஐ. துரைப்பாண்டியன் மீது ஒழுங்கீன நடவடிக்கையே எடுத்திருக்க முடியும். ஆனாலும், மனிதாபிமானத்துடன் அவருக்கு விடுமுறை கிடைக்கும்படி செய்திருக்கிறாராம் கமிஷனர்.