’’திமுக இளைஞரணியில் 30 இலட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 14 ல் நடைபெற உள்ளது. அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்கவேண்டும் என திமுக தொண்டர்களுக்கு ’’ திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் நீர் நிலைகளை மேம்படுத்துவதற்காக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதனடிப்படையில் குளங்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் அருகே கூடுர் ஊராட்சி நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள திருவாசல் குளம் தூர்வாரும் பணி நடைபெற்றது. அதனை திமுக இளைஞர் அணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஜேசிபி இயந்திரத்தை இயக்கி தூர்வாரும் பணியை துவக்கிவைத்தார்.
குளம் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதி ஸ்டாலின்,
’’திமுக இளைஞரணி சார்பில் தமிழகம் முழுவதும் தங்களால் முடிந்த அளவு குளங்களை தூர்வார திட்டமிட்டுள்ளோம். இளஞரணியில் நிர்வாகிகள் மாற்றுவதற்கான நடவடிக்கை தற்போது இல்லை. உறுப்பினர் சேர்க்கையில் ஆர்வம் காட்டவேண்டும். திமுக இளைஞரணியில் 30 இலட்சம் உறுப்பினர்களை சேர்ப்பதற்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் செப்டம்பர் 14ல் நடைபெற உள்ளது. அதற்கு அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்கவேண்டும்.’’ என்றார்.
அங்கிருந்து புறப்பட்டு கலைஞரின் சொந்த ஊரான திருக்குவளை சென்றுள்ள உதயநிதி அங்கும் இளைஞர்களை சந்திக்க இருக்கிறார்.