ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் நகராட்சிக்கு சொந்தமான 200க்கும் மேற்பட்ட கடைகள் வாடகைக்கு விடப்பட்டு இருக்கிறது. இது தவிர தனியாருக்கு சொந்தமான ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்னர் நகராட்சி சார்பில் முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த அறிவிப்பில் நகராட்சி கடைகளுக்கு வாடகை உயர்த்தப்பட்டு இருப்பதாகவும், சொத்து வரி (5 மடங்கு அதிகரிக்கப்பட்டு இருக்கிறது), தண்ணீர் வரி மற்றும் குப்பை வரி (புதிதாக கொண்டு வரப்பட்டுள்ளது) உயர்த்தப்பட்டு இருப்பதாக சொல்லப்படுகிறது.
இதையறிந்து அதிர்ச்சியடைந்த வியாபாரிகள் மற்றும் அனைத்து கட்சியை சேர்ந்த பிரதிநிதிகள் கடந்த வாரம் கலந்தாலோசனை கூட்டம் நடத்தினர். அந்தக் கூட்டத்தில் இன்று கடையடைப்பு செய்து சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடுவது என முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், சத்தியமங்கலம் முழுவதும் இன்று கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. வியாபாரிகள், அனைத்துக் கட்சி பிரமுகர்கள் இன்று காலை ஊர்வலமாக வந்து சத்தியமங்கலம் நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். அதன்பின்னர் நகராட்சி ஆணையர் சுதாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்ற ஆணையர் இது குறித்து பரிசீலனை செய்யப்படும் என கூறியுள்ளார்.
நகராட்சி கடைகளின் மூலம் கிடைக்கும் வரி மூலம்தான் நகராட்சிக்கு வளர்ச்சி பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், வியாபாரம் செய்யும் எங்களுக்கு பல மடங்கு வரியை உயர்த்துவது எப்படி நியாயமாகும் என்று வியாபாரிகள் கேள்வி எழுப்புகிறார்கள்.