திமுக சார்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கப்பட்ட கிராமசபைக் கூட்டம் பிப்ரவரி 17 ஆம் தேதியுடன் நிறைவடையும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 12 ஆயிரத்து 617 ஊராட்சிகளிலும் இத்தகைய கிராமசபைக் கூட்டங்களை திமுகவினர் ஏற்பாடு செய்கின்றனர். இதுவரை சுமார் 12 ஆயிரத்துக்கும் அதிகமான கிராமசபைக் கூட்டங்கள் நடந்து முடிந்துள்ளன.
மதுரை மாவட்டத்துக்கு உட்பட்ட சோழவந்தான் தொகுதியில் அலங்காநல்லூர், வாடிப்பட்டி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊராட்சிகளிலும் ஒரே நேரத்தில் கிராமசபைக் கூட்டங்கள் நடந்தன. அலங்காநல்லூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கொண்டயம்பட்டி ஊராட்சியில் ஜனவரி 9 ஆம் தேதி தொடங்கிய கிராமசபைக் கூட்டம், பிப்ரவரி 10 ஆம் தேதி 15பி மேட்டுப்பட்டி ஊராட்சியில் நிறைவடைந்தது. ஒன்றியத்துக்கு உட்பட்ட 37 ஊராட்சிகளில் இந்தக் கிராமசபைக் கூட்டம் நடந்து முடிந்திருக்கிறது. வாடிப்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமசபைக் கூட்டங்கள் ஓரிரு நாட்களில் நிறைவடையும் என்று கூறப்படுகிறது. இந்தக் கூட்டங்களில், திமுக சட்டதிட்டக்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு, மதுரை வடக்கு மாவட்ட மகளிர் அணி செயலாளர் ரேணுகா ஈஸ்வரி கோவிந்தராஜ், அலங்காநல்லூர் ஒன்றியச் செயலாளர் இரா.கென்னடி, மாநில செயற்குழு உறுப்பினர் தனராஜ், மாவட்ட துணைச் செயலாளர் விஜயலெட்சுமி முத்தையா, முன்னாள் எம்எல்ஏ ராதாகிருஷ்ணன், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் ராமலிங்கம், விவசாய அணி செயலாளர் நடராஜன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்தக் கிராமசபைக் கூட்டங்கள் நடந்து முடியும் சமயத்தில் சுமாராக ஒன்றுமுதல் ஒன்றரைக் கோடி மக்களை திமுகவினர் நேரடியாகச் சந்தித்திருப்பார்கள் என கணக்கிடப்பட்டுள்ளது. இந்தக் கூட்டங்களின் மூலம் மாநில அரசின் அலட்சியத்தால் தேங்கிக் கிடக்கும் ஊராட்சி நிர்வாகப்பணிகள் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்று திமுக பிரமுகர்கள் கூறுகிறார்கள்.