Skip to main content

கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

Published on 24/08/2017 | Edited on 24/08/2017
கமுதி பேரையூர் கண்மாய்க்குள் அழிந்து போன சிவன் கோவிலைச் சேர்ந்த கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு


 
இராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே உள்ள பேரையூர் கண்மாய்க்குள் சிதறிக் கிடக்கும் கற்கள் தூண்களிலே கல்வெட்டுகள் இருப்பதாக இவ்வூரைச் சேர்ந்த ஆசிரியர்கள் கு.முனியசாமி,  சா.செல்வக்குமார் ஆகியோர் கொடுத்த தகவலின் பேரில், திருப்புல்லாணி அரசு மேல்நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்ற பொறுப்பாசிரியரும் தொல்லியல் ஆய்வாளருமான வே.இராஜகுரு அக்கல்வெட்டுகளை படியெடுத்து ஆய்வு செய்தார். 

இதுபற்றி அவர் கூறியதாவது,

கண்மாய்க்குள் கல்வெட்டுகள்

1985 ஆம் ஆண்டு பேரையூர் கண்மாயில் ஏற்பட்ட வெள்ளத்திற்குப் பின், குமிழி மடை, செங்கமடையை உயர்த்திக் கட்ட தோண்டியபோது, பெரிய அளவிலான கற்கள் புதைந்த நிலையில் இருந்து வெளிப்பட்டுள்ளன. அப்போது அம்மடைகளின் அருகிலேயே அக்கற்களை ஓரமாகப் போட்டுவிட்டு மடை கட்டியுள்ளனர்.

சிவன் கோயில்  

அவற்றில் குமிழி மடையில் ஒன்பதும் செங்கமடையில் இரண்டுமாக 11 துண்டுக்கல்வெட்டுகள்    கண்டுபிடிக்கப்பட்டன. நான்கு காலகட்டங்களில் வெட்டப்பட்டுள்ள இக்கல்வெட்டுகள் 13 ஆம் நூற்றாண்டு கால எழுத்தமைதியில் உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் சிவன் கோயில் இருந்து அழிந்துள்ளதை அறியமுடிகிறது. கோயிலின் அடிப்பகுதியான ஜகதி, பட்டிகையில் இருந்த கற்களில் தான் கல்வெட்டுகள் உள்ளன.

கல்வெட்டு செய்தி

கி.பி.1238 முதல் கி.பி.1258 வரை மதுரையை தலைநகராகக் கொண்டு ஆண்ட இரண்டாம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் மெய்க்கீர்த்தியின் சில பகுதிகள் இக்கல்வெட்டுகளில் இருப்பதால்,  இவற்றில் சில அவருடைய காலத்தைச் சேர்ந்தவை என்பது உறுதியாகிறது.

இதில் ஈழம், கடாரம், கவுடம், தெலிங்கம் ஆகிய நாடுகளின் பெயர்கள்  குறிக்கப்பட்டுள்ளன. ஒரு கை, இரு செவி, மும்மதம், நாற்கோட்டு என வரிசைச் சொற்களால் மெய்க்கீர்த்தி அழகுபடுத்தப்பட்டுள்ளது. கல்வெட்டில் உத்தமபாண்டிய நல்லூர், அண்டநாட்டுப் பெருமணலூர் ஆகிய ஊர்கள்  குறிப்பிடப்பட்டுள்ளன. இதில் உத்தமபாண்டிய நல்லூர் அபிராமம் அருகே உள்ள மேலக்கொடுமலூர் ஆகும்.  பெருமணலூர் மதுரை திருப்புவனம் அருகில் உள்ளது.



நின்றாடுவான் வீரசோழ தேவனான குருகுலத்தரையன், விக்கிரப் பாண்டிய உத்தர மந்திரி ஆகிய அரசு அதிகாரிகள், பாண்டிய நல்லூர் பட்டர் என்ற பிராமணர், இரண்டாம் சுந்தரபாண்டியனின் பட்டத்துஅரசி உலகமுழுதுடையார் ஆகியோர் கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

வெட்டிபாட்டம், பஞ்சுபீலி ஆகிய வரிகள், ஐப்பசிக் குறுவை, கோடைக் குறுவை ஆகிய விவசாய பருவங்கள், பத்து மா எனும் ஒரு நிலஅளவு, திருக்காமக்கோட்டம் எனும் அம்மனுக்கான கோயில் ஆகியவை பற்றியும் கூறப்பட்டுள்ளன. கரிசல்நிலம் கருஞ்செய் என சொல்லப்பட்டுள்ளது.

இறையிலி

இக்கோயிலில் காலை மாலை பூஜைக்காக நல்லான் என்பவரால் ஒரு சந்தி உருவாக்கப்பட்டு,  அதற்காகவும், வேண்டும் நிமந்தங்களுக்காகவும், இக்கோயிலுக்கு இறையிலி தேவதானம் வழங்கப்பட்டுள்ளது. இதற்காக நல்லூர் எனும் ஒரு ஊரை விற்று இருப்பதை அறியமுடிகிறது. ஆவுடைய நாச்சியார் என்பவர் வழங்கிய தேவதானம் பற்றியும் கூறப்பட்டுள்ளது.



 இறையிலி நிலத்தின் எல்லை கூறும்போது, பள்ளிச்சந்தம் நீக்கி கொடுக்குமாறு வரும் தொடரால் இப்பகுதியில் சமண, புத்த கோயில்கள் இருந்திருக்க வாய்ப்புள்ளது.
அழிந்த கோயில்

தற்போது கண்மாய்க்குள் இருக்கும் கற்களும், தூண்களும் கோயிலின் அடிப்பகுதி என்பதால்  இது அழிந்து போன அல்லது அழிக்கப்பட்ட கோயிலாக இருக்கலாம். இவ்வூர் பேருந்து நிறுத்தம் அருகில் சில ஆண்டுகளுக்கு முன் குழி தோண்டியபோது புதைந்த நிலையில் சாமி சிலைகள் இருந்ததாக இவ்வூர் மக்கள் கூறினார்கள். அவை இந்த கோயிலின் சிலைகளாக இருக்கலாம்.

இரா.பகத்சிங்

சார்ந்த செய்திகள்