Skip to main content

"எல்லாம் போச்சு... எங்களுக்கு பொங்கலே இல்லை!" - வேதனையில் விருதுநகர் விவசாயிகள் 

Published on 16/01/2021 | Edited on 16/01/2021

தமிழர்களால் சிறப்பாகக் கொண்டாடப்படும் தனிப்பெரும் விழா தைப்பொங்கல். உழவர்கள், உழைக்கும் மக்களின் இயற்கை தெய்வமாகக் கருதப்படும் சூரியனுக்கும் உழவுக்குத் துணை செய்யும் மற்ற உயிர்களுக்கும் நன்றி கூறும் விதமாக இவ்விழா  கொண்டாடப்படுகிறது.

 

ஆடிப்பட்டம் தேடி விதைத்து, விதைத்ததை அறுவடை செய்து பயன் அடையும் மாதம் தை மாதம் ஆகும். அறுவடையில் கிடைத்த நெல்லின் புத்தரிசியைச் சர்க்கரை, நெய் கலந்து புதுப்பானையில் பொங்கலிட்டு சூரியனுக்கும், மாட்டுக்கும் படைத்து குடும்பத்தோடு உண்டு மகிழ்வது வழக்கம். நீர் வளம் கொண்ட இடங்களில் மூன்று வேளாண்மை நடக்கும். நீர் வளம் இல்லா இடங்களில் மழை நீரைப் பயன்படுத்தி ஒரு வேளாண்மைதான் விளைவிக்க முடியும். அதுவும் தைமாதத்தில்தான் அறுவடை செய்யப்படும்.

 

பொங்கல் கொண்டாடுவதன் பின்னுள்ள நோக்கமும் முழுமையான பழக்கமும் தெரியாதவர்கள் கூட நம் பாரம்பரியத்தைப் பின்பற்ற வேண்டுமென்ற எண்ணத்திலும் மகிழ்ச்சியிலும் கொண்டாடி வருகின்றனர்.

 

கடந்த வருடம் முழுவதும் நாடே கரோனாவினால் வீட்டிலே முடங்கி இருந்தபோதும் தொடர்ந்து விருப்பத்துடன் வெளியே வந்து உழைத்தவர்களுள் விவசாயிகள் மிக முக்கியமானவர்கள். கரோனா ஊரடங்கால் ஏற்பட்ட பொருளாதார இழப்பிலிருந்து மெல்ல மீண்டு வந்து ஊக்கமாகப் புத்தாண்டு, பொங்கல் என மக்கள் கொண்டாடி வருகின்றனர்.

 

இந்நிலையில் சமீபமாகத் தொடர்ந்து விடாமல் மழை பெய்த காரணத்தால் தமிழகத்தில் பல விவசாயிகளின் வாழ்க்கை கேள்விக்குறியாகியுள்ளது. இதனால் அவர்கள் கொண்டாட வேண்டிய இந்தத்  திருவிழா அவர்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

தமிழகத்தில் பல இடங்களில் விவசாயம் பாதிப்பு அடைந்த போதிலும் விருதுநகர் மாவட்டத்தில் செவல்பட்டி உள்ளிட்ட சில இடங்களில் ஏற்பட்ட பாதிப்புகள் நாம் அனைவரும் கூர்ந்து கவனிக்க வேண்டிய ஒன்று. அந்த ஊர் மக்களிடம் இதுகுறித்து பேசியபோது, "மற்ற இடங்களில் மூன்று போகம் விளைச்சல் செய்கிற நிலையில், விருதுநகர் போன்ற வறண்ட பூமியில் ஒரு போகம் விளைந்தாலே அரிது. காரணம் நாங்கள் முழுவதுமாய் மழையை நம்பியே விளைவிக்கிறோம். அப்படி விளைந்த மக்காச்சோளம், உளுந்து போன்ற பயிர்கள் அறுவடை செய்ய வேண்டிய இந்த மாதத்தில் அளவுக்கு மீறிய கடும் மழையால் அனைத்து பயிர்களும் அழுகி எதற்கும் உபயோகம் ஆகாத நிலை உருவாகிவிட்டது.

 

இந்த மாவட்டத்தில் மட்டும் பாதிக்கப்பட்ட நிலம் 300 ஏக்கருக்கும் மேலாக இருக்கும். இதனால் வருடத்திற்கு ஒரு முறைமட்டுமே விவசாயம் செய்து வாழ்ந்து வரும் எங்க ஊர் மக்களின் வாழ்வாதாரம் கடும் பாதிப்புக்குள்ளாகியிருக்கு. எல்லாம் போச்சு... எங்களுக்குப் பொங்கலே இல்லை" என்று வேதனையுடன் கூறுகிறார்கள்.

 

அவர்கள் இல்லையேல் நாம் இல்லை என்பதை நினைவில் கொண்டு அவர்களுக்கு உரிய உதவியையும் நிவாரணத்தையும் அரசு கிடைக்கச் செய்ய வேண்டும் என்பது அம்மக்களின் கோரிக்கையாக உள்ளது.

 

 

 

 

 

சார்ந்த செய்திகள்