கரோனா பெருந்தொற்றை தடுப்பதற்காக மத்திய, மாநில அரசுகள் தடுப்பூசி போடுவதை தீவிரமாக்கியுள்ளன. தற்போது 15 வயது முதல் 18 வயது வரை உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்நிலையில் கடந்த 23.6.2020 அன்று தீர்ப்பளித்த மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்வநாத் சோமதர் மற்றும் நீதிபதி எச்.எஸ்.தங்க்யூ ஆகியோர் தடுப்பூசியை கட்டாயப்படுத்துவது இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமைகளுக்கு எதிரான செயல் என அறிவித்தனர்.
அதன் அடிப்படையில், இந்திய குடிமக்கள் சுதந்திரமாக இயங்கவும், வெளியே சென்று தங்களுக்கான விருப்பமுள்ள வேலையை பார்த்துக் கொண்டு, உயிர் வாழ்வதை அடிப்படை உரிமையாக இந்திய அரசியலமைப்புச் சட்டம் அங்கீகரித்துள்ளது என்பதனை விளக்கியும், தமிழ்நாடு அரசு தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி அரசு அளித்துள்ள விடையில், தமிழகத்தில் தடுப்பூசி செலுத்தப்படுவது கட்டாயப் படுத்தப்படவில்லை என கூறியிருக்கும் நிலையில் தற்போது நடைமுறையில் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுக்கு அரசு கட்டாயப்படுத்தி தடுப்பூசி போட செய்து வருவதாக கூறி, "கட்டாயத் தடுப்பூசி சட்ட விரோதம்! விரும்புவோருக்கு மட்டுமே தடுப்பூசி போடுக!” என வலியுறுத்தி, கடலூர் மாவட்டம், பெண்ணாடம் பேருந்து நிலையத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மா.மணிமாறன் தலைமை தாங்கினார். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் க. முருகன், மகளிர் ஆயம் பொதுச் செயலாளர் மு.செந்தமிழ்ச்செல்வி, மகளிர் ஆயத் வே.தமிழ்மொழி, செந்தமிழ் மரபுவழி வேளாண் நடுவத்தின் பொருப்பாளர் சிலம்புச்செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தி.சின்னமணி, மகளிர் ஆயம் பொருளாளர் ம.கனிமொழி, நாம் தமிழர் கட்சி சார்பில் பெண்ணாடம் நகரத் தலைவர் சந்தோசு, நகர துணைத் தலைவர் சக்திவேல், நகரச் செயலாளர் முகமது அலி ஜின்னா, திட்டக்குடி சட்டமன்றத் தொகுதி கையூட்டுப் ஊழல் ஒழிப்புப் பாசறை தொகுதிச் செயலாளர் மணிகண்ட ராஜா, நல்லூர் மேற்கு ஒன்றியத் தலைவர் இளந்தமிழன், திட்டக்குடி சட்டமன்ற தொகுதி துணைச் செயலாளர் குமார், நரசிங்கமங்கலம் திவாகர் செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவத்தின் பொருப்பாளர் கோட்டேரி சிவக்குமார் உள்ளிட்டோர் கட்டாய தடுப்பூசிக்கு எதிராக கண்டன உரையாற்றினர்.
மத்திய மாநில அரசுகளின் கட்டாய தடுப்பூசியை முறையை கண்டித்தும், கொரோனா பெரும் தோற்றால் பாதிக்கப்பட்டு இறந்த மற்றும் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கு அரசு இழப்பீடு வழங்க கோரியும் முழக்கங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.