தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி சிதம்பரம் அருகே உள்ள கீரப்பாளையத்தில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்,
எனது 40 ஆண்டுகால அரசியல் வாழ்வில் எளிய காங்கிரஸ் கட்சியின் தொண்டனாக வாழ்ந்து இருக்கிறேன். அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி என்னை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக நியமித்துள்ளார். அதற்காக எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னை அடையாளம் கண்டு பெருந்தலைவர் காமராஜர் அமர்ந்த இடத்தில் அமர வைத்து இருக்கிறார்கள். அதற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முன்னாள் மத்திய அமைச்சர் தலைவர் ப சிதம்பரம், அகில இந்திய பொதுச் செயலாளர் முகுல்வாஸ்னிக் உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றி
காங்கிரஸ் கட்சியின் உயர்ந்த கொள்கைகளை தூக்கி பிடித்து நிறுத்த வேண்டும் என்பதே எனது கொள்கை. மதசார்பற்ற கொள்கை ஜனநாயக சோசலிசத்தை இந்தியாவில் அறிமுகம் செய்தது, எளியவர்களுக்கும் அதிகாரத்தை வழங்கிய காங்கிரஸ் கட்சி, மதங்களுக்கும், சாதிகளுக்கும் அப்பாற்பட்டது. இந்தியாவின் எல்லா பகுதிகளும் நலமாக இருக்க வேண்டும். அந்த நோக்கம் நிறைவேற நான் பாடுபடுவேன்.
எனது உடனடிக் கடமை என்பது தமிழகம் புதுச்சேரி ஆகிய 40 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும். திமுக தலைவர் ஸ்டாலின் அவர்கள் ராகுல் காந்தியை பிரதமராக வரவேண்டும் என முன்னிறுத்தினார். அதற்கு நன்றிக் கடன் செலுத்தும் விதமாக திராவிட முன்னேற்றக் கழகம் கூட்டணி மற்றும் பிற கட்சிகளும் தமிழகத்தில் 40 தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும். தமிழகத்தை வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்ல வேண்டும். சிறந்த வளர்ந்த மாநிலமாக தமிழகத்தை உருவாக்க வேண்டும்
ஏழை எளியோரின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த பாடுபடுவேன் என்றார்.
மேலும் இவர் மாணவப் பருவத்தில் இடதுசாரி கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு இந்திய மாணவர் சங்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு மாணவர்களுக்கு ஆதரவாக நடைபெறும் போராட்டங்களில் கலந்து கொண்டுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்து எளிமையான முறையில் அரசியல் பணியை தொடங்கி கடந்த 1987 இல் மக்களால் நேரிடையாக தேர்ந்தெடுக்கப்படும் முறையில் கீரப்பாளையம் ஒன்றிய பெருந்தலைவராக நியமிக்கப்பட்டார். 1991 - 96 சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1996 - 2001 வரை தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் சிதம்பரம் தொகுதி எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதன் பின்னர் காங் கட்சி சார்பில் 2009 முதல் 2014 வரை கடலூர் பாராளுமன்ற தொகுதி உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு இரண்டு மனைவிகள். மூன்று மகள், ஒரு மகன் உள்ளனர். இவரை காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவராக அறிவிக்கப்பட்டதை அறிந்த கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் நண்பர்கள் உறவினர்கள் என அனைத்து தரப்பினரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.