தமிழகத்தின் மேற்கு மாவட்டங்களான கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு, பெட்ரோல் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம்,உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட விவசாய விளை நிலங்கள் வழியாக விவசாயிகளுக்கு எதிரான இந்த திட்டங்களை கண்டித்தும் இவைகளை ரத்து செய்ய கோரியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தப்படும் என ஈரோடு மாவட்டம் சென்னிமலையில் இன்று நடைபெற்ற தமிழ் நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்க செயல் திட்ட கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் "விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் விரைவில் மத்திய அரசு ரத்து செய்ய போகிறது" என திமுக துணை பொது செயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் எச்சரிக்கை விடுத்தார். தமிழகத்தில் உயர் மின் கோபுரம் அமைப்பதை தடுத்தல் எரிவாயு கெயில் குழாய் பாதிப்பு பெட்ரோலிய பொருட்கள் கொண்டு செல்வதை தடுத்தல், ஹைட்ரோகார்பன் திட்டம், எட்டுவழி சாலை போன்ற விவசாயத்தை அழிக்கும் மத்திய, மாநில அரசுகளின் அராஜகத்தை கண்டித்து விரிவாக பேசினார் ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி.
இதில் கொங்கு மண்டல பாராளுமன்ற உறுப்பினர்கள் சி.பி.ஐ. திருப்பூர் - சுப்பராயன், கொ.ம.தே.க. நாமக்கல் - சின்ராஜ், தி.மு.க. பொள்ளாச்சி - சண்முகசுந்தரம், காங்கிரஸ் கரூர் - ஜோதிமணி சி.பி.எம்.கோவை, - P.R.நடராஜன் ஆகிய ஆறு பாராளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினர். கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஈரோடு பாராளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி செய்தியாளர்களிடம் பேசும் போது,
கொங்கு மண்டலத்தில் கெயில் எரிவாயு குழாய் பதிப்பு பெட்ரோல் குழாய் மூலம் கொண்டு செல்லும் திட்டம் உயர் மின் கோபுரம் அமைக்கும் திட்டம் உள்ளிட்ட விவசாயிகளுக்கு எதிரான திட்டத்தை கண்டித்தும் ரத்து செய்ய கோரியும் மாபெரும் மனித சங்கிலி போராட்டம் நடத்தபடும் தேதி பிறகு அறிவிக்கப்படும் எனவும் பாண்டியாறு புன்னம் புழா திட்டம், ஆழியாறு ஆனைமலையாறு திட்டம், அத்தி கடவு அவனாசி திட்டம் போன்ற பாசன திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்" என தெரிவித்தார்.
கூட்டத்தில் திமுக துணை பொதுசெயலாளர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உரையாற்றும் போது, ஜல்லிகட்டு போராட்டத்தின் போதும் ஹைட்ரோகார்பன் எதிர்ப்பு மனித சங்கிலி போராட்டத்தில் இளைஞர்கள் பெருமளவில் கலந்து கொண்டதுபோல் இளைஞர்களை நமது பகுதியில் நடைபெறும் மனித சங்கிலி போராட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும்" என்றார்.
விவசாயத்தை அழிக்கும் மத்திய மாநில அரசுகளின் அராஜகத்தை கண்டித்து கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தி.மு.க., காங்கிரஸ், சி.பி.ஐ., சி.பி.எம். ம.தி.மு.க., கொ.ம.தே.க, என 6 எம்.பி.க்கள் இணைந்து தமிழ்நாடு உழவர்கள் வாழ்வாதார பாதுகாப்பு இயக்கம் என்ற புது அமைப்பை தொடங்கி போராட்ட களத்தில் இறங்கியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.