துணை முதல்வர் ஒபிஎஸ் மாவட்டமான தேனி மாவட்டத்தில் உள்ள சின்னமனூர் அருகே இருக்கும் காமாட்சிபுரத்தில் குடியிருந்து வருபவர் கணேசன். இவருடைய மகளான பத்து வயதான நந்தினி அப்பகுதியில் உள்ள பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 2014 ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஒரு நாள் வழக்கம் போல் பள்ளிக்கு போய்விட்டு வந்த நந்தினி அருகே உள்ள தனது தோழி முருகேஸ்வரி வீட்டுக்கு செல்லும்போது அப்பகுதியை சேர்ந்த சுப்புராஜ், ராபின் என்ற ரவி, குமரேசன் ஆகியோர் சிறுமி நந்தினியை வழி மறித்து சிறுமி என்று கூட பார்க்காமல் பாலியல் வன்கொடுமை செய்து பின்னர் கொலை செய்து சிறுமி நந்தினியை அருகே உள்ள கிணற்றில் வீசி விட்டு சென்றனர்.
இது சம்மந்தமாக ஓடைப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்த போதுதான் இந்த காமகொடூரன்களின் செல் மூலமே போலீசாரிடம் சிக்கி கொண்டனர். அதன் அடிப்படையில் அந்த பாலியல் கொலை குற்றவாளிகள் மூன்று பேரையும் போலீசார் கைது செய்ததின் பேரில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து தேனியில் உள்ள மகளிர் கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது. போலீசாரும் இந்த பாலியல் கொலையில் இருந்து குற்றவாளிகள் தப்பிக்காமல் இருக்க பல ஆதாரங்களை கொடுத்தும் அரசு தரப்பில் வாதாடிவந்தனர். அதோடு சமீபத்தில் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட பாலியல்ரீதியாக மாணவி மற்றும் சிறுமி கொலை செய்யப்பட்டால் தூக்கு தண்டனை என போக்சா என்ற சிறப்பு சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்துள்ளதையும் முன்வைத்து வாதாடி வந்தனர்.
இந்த நிலையில் தான் பாலியல் கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நந்தினியின் இறுதி தீர்ப்பு கடந்த ஆண்டுகளுக்கு பிறகு நேற்று தீர்ப்பு வழங்கியது நீதிமன்றம். பாதிக்கப்பட்ட நந்தினி குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அதோடு குற்றவாளிகளின் உறவினர்களும் தேனியில் உள்ள மகளிர் சிறப்பு கோர்ட்டுக்கு வந்தனர். அதோடு குற்றவாளிகள் மூன்று பேரையும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோர்ட்டுக்கு கொண்டு வந்தனர்.
அனைத்து ஆவணங்களையும், சாட்சிகளையும் விசாரித்த மகளிர் சிறப்பு நீதிமன்றத்தின் நீதிபதி திலகவதி அந்த மூன்று குற்றவாளிகளுக்கும் போக்சா சட்டப்படி தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அதோடு தலா 50 ஆயிரம் அபதாரமும் விதித்தார். இந்த தீர்ப்பிற்கு பாதிக்கப்பட்ட நந்தினி குடும்பத்தினர் நீதிபதிக்கு நன்றி தெரிவித்தனர். அதோடு குற்றவாளிகளுக்கு சரியான தீர்ப்பை வழங்கியுள்ளதை கண்டு நந்தினி உறவினர்களும் வரவேற்றனர். இச்சம்பவம் தேனிமாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.