Skip to main content

அமைச்சர்கள் வீட்டுக்கு அருகில் செயற்கை கூவம்... குமுறும் பொதுமக்கள்!

Published on 16/08/2019 | Edited on 16/08/2019

"மழைக் காலம் விரைவில் தொடங்க இருக்கும் நிலையில், அதனால் எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு சாக்கடை வடிகால்கள் அனைத்தும் போர்கால அடிப்படையில் விரைந்து சீர்செய்யப்பட்டு வருகிறது. 90 சதவீத பணிகள் நிறைவடைந்துவிட்டன. மீதிப் பணிகள் விரைவில் முடிக்கப்படும்" இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கூறிய சில வினாடிகளில் தமிழக அமைச்சர் ஒருவர் உதிர்த்த வார்த்தைகள்தான் இவை.
 

k



நீங்கள் கீழே பார்க்கும் புகைப்படம் கூட அமைச்சர் எந்த இடத்தில் இருந்து பேட்டி கொடுத்தாரோ அதில் இருந்து சில நூறு மீட்டர் இடைவெளியில் அமைத்துள்ள பகுதியில் எடுத்த புகைப்படம் தான். சென்னையில் உள்ள அகில இந்திய வானொலி நிலையத்திற்கு  நேர் எதிராக இந்த பகுதி உள்ளது. பல மாதங்களாக பழுதடைந்துள்ள சாக்கடைக் குழாய்கள் முறையாக சீரமைக்கப்படாத காரணத்தால் கழிவுநீர் சாலையில் வெள்ளம் போல் ஓடுவதை எளிதாக காண முடிகிறது.

 

r



இது தொடர்பாக அந்த பகுதியில் வசிக்கும் முதியவர் ஒருவரிடம் பேசிய போது, " சார், இந்த சாக்கடை பிரச்சனை இன்னைக்கு நேத்து இல்லைங்க. பல மாசமா இருக்கு. நாங்க புகார் கொடுக்காத ஆளே இல்லை. இந்த ஏரியாவ சுத்தி மருத்துவமனை இருக்கு, நிறைய பள்ளிக்கூடம் இருக்கும். ஏன் சார் அமைச்சருங்க, அதிகாரிங்க வீடு கூட இருக்கு. இந்த வழியாதான் தினமும் அவங்க போறாங்க. போலிஸ்காரங்க அவுங்க போறப்ப கூட பாதுகாப்புக்கு மூக்கை பொத்திக்கிட்டு இங்கதான் ஓரமா நிப்பாங்க. அவங்களால என்ன பண்ணமுடியும்? அதிகாரிங்க பாத்து ஏதாவது செஞ்சாதான் உண்டு. ஆனா இதை அவுங்க கவனிக்க மாட்டேங்குறாங்க. பக்கத்தால இருக்கிற அமைச்சரோடு குவாட்ரஸில் இதே மாதிரி சாக்கடை பிரச்சனைனு போன வாரம் 20 பேருக்கு மேல வேலை பாத்து, அதை சரிசெஞ்சாங்க. அதுல ஒரு நாலு பேர விட்டு இதை பாக்கமுடியாதா? நாங்க ஓட்டு போட்டுதானே சார் அவுங்க அமைச்சர், முதல் அமைச்சர். அதிகாரிங்க எங்களை பாத்துக்கதானே இருக்காங்க? இங்க பாருங்க சார், எவ்வளவு பெரிய ஈ கூட்டம் இருக்குதுன்னு. இது கடிச்சா உடனே ரத்தம் கட்டிடுது. வாடை தாங்க முடியல. பத்தடியில பஸ் ஸ்டாண்டு இருக்கு. அங்கே பாருங்க, எல்லாரும் மூக்கை மூடிகிட்டு நிக்குறாங்க. எங்க கஷ்டத்த யாருகிட்ட சொல்றது, சொன்னாலும் யாரும் நடவடிக்கை எடுக்கிறது இல்லைங்க" என்று மூக்கை மூடியபடியே அந்த சாக்கடை கழிவுநீரை கடந்து சென்றார் அந்த முதியவர்.

 

f


மேலே இருக்கும் முதல் புகைப்படம் இரண்டு வாரங்களுக்கு முன்பு எடுத்தது. இரண்டாவது, மூன்றாவது புகைப்படங்கள் இன்று காலையில் எடுத்தது. நாளுக்கு நாள் சாக்கடை நீர் அதிகமாகிக் கொண்டே வருகிறது என்பதற்கு இந்த படங்களே சாட்சி. இதில் கொடுமை என்னவென்றால், சாக்கடை கழிவுகளை வெளியேற்ற சில இரும்புக் குழாய்களை பல வாரங்களுக்கு முன்பு கொண்டு வந்து போட்டிருக்கின்றனர். போட்ட இடத்திலிருந்து இன்னும் ஒரு இன்ச் கூட அசையாமல் இன்னும்  அங்கேயே  கிடக்கிறது அந்த குழாய்கள். அதிகரித்துக் கொண்டே வரும் சாக்கடை நீர் இப்போது அந்த குழாய்களுக்குள்ளும் புகுந்து வருகிறது. ‘பொதுவா மண்ணுக்குள்ள தான் இந்த குழாய்கள புதைச்சு வைப்பாங்க. அதுக்குள்ள சாக்கடை ஓடும். இங்க என்னடான்னா புதைக்குறதுக்கு முன்னாடியே இந்த குழாய்களுக்குள்ள சாக்கடை ஓடுது’ என்று வேதனையுடன் சிரிக்கின்றனர் இந்த பகுதி மக்கள்.

அந்த முதியவர் சொன்னது போலவே, இந்த பகுதியை சுற்றி பல உணவகங்கள், டீக்கடைகள், நிறைய குழந்தைகள், முதியோர் உள்ள குடியிருப்பு பகுதிகள் உள்ளன. அவ்வளவு ஏன்.. இதற்கு சில அடிகள் தள்ளி அம்மா உணவகம் ஒன்று கூட உள்ளது. சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து பேருந்துக்காக வரும் கூட்டம், கடற்கரையில் உடற்பயிற்சி முடித்து வரும் கூட்டம், எதிரில் இருக்கும் அகில இந்திய வானொலி நிலையத்திற்கு வரும் கூட்டம், அதற்கடுத்து இருக்கும் காவல்துறை அலுவலகத்திற்கு வரும் மக்கள் என தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் சாலை இது. தினம் தினம் இந்த இடத்தைக் கடக்கும் மக்களுக்கு இதன் மூலம் பல்வேறு வகைப்பட்ட நோய்களும், வேறுபல உடல் உபாதைகளும் வருவதற்கான வாய்ப்புகள் நிறையவே உள்ளன. கண்முன்னே காத்திருக்கும் ஒரு அபாயத்தை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டு, வந்தபின் புலம்புவதிலும் நிவாரணங்கள் கொடுப்பதிலும் பயனேதுவும்  இல்லை.  இதுபோன்ற அசுத்தங்களால் இந்த மக்கள் பாதிக்கப்படுவதும் புதிது இல்லை. நம்மிடம் பேசிய முதியவரே கூட யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவர் தான்.

இந்த மக்களை, அவர்களின் நிலங்களில் இருந்து வெளியேற்ற காட்டும் அவசரத்தை, அந்த நிலத்தில் தேங்கியிருக்கும் சாக்கடையை வெளியேற்றுவதில் காட்டுமா அரசு?

 

சார்ந்த செய்திகள்