ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே வேகமாக வந்த அரசு விரைவுப் பேருந்து, பேருந்துக்காக நின்று கொண்டிருந்தவர்கள் மீது மோதியதில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ராமநாதபுரம் கீழக்கரை அடுத்துள்ள தனியார் கல்லூரி அருகே இன்று மாலை தூத்துக்குடியில் இருந்து சென்னை நோக்கி எஸ்.இ.டி.சி எனப்படும் அரசு விரைவு பேருந்து வந்து கொண்டிருந்தது. அதேபோல் ராமேஸ்வரத்தில் இருந்து மீன் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்றும் எதிர்ப்புறம் வந்துள்ளது. லாரியானது பேருந்து மீது நேருக்கு நேராக மோதும்படி வந்ததால், பேருந்து ஓட்டுநர் சாலையின் ஓரத்தில் பேருந்தை இறக்கியுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையின் கீழ் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த இரண்டுக்கும் மேற்பட்ட பெண்கள் மீது மோதியது.
இதில் இரண்டு பெண்கள் பேருந்து சக்கரத்தில் சிக்கி உயிரிழந்தனர். இருவரையும் மீட்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. மேலும் சிலர் பேருந்து அடியில் சிக்கி இருக்கலாம் என அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில் பேருந்தை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. அதேபோல் பேருந்தில் பயணித்துக் கொண்டிருந்த பத்திற்கும் மேற்பட்டோர் இந்த விபத்தில் காயமடைந்துள்ளனர். மீட்கப்பட்ட அனைவரும் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பேருந்துக்காக காத்திருந்த பெண்கள் மீது அரசு விரைவுப் பேருந்து மோதி, இருவர் உயிரிழந்த சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.