கோப்புப்படம்
திருப்பத்தூர் மாவட்டம், வேலூர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் அதிகரித்துவிட்டது. ஆனால் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை என்றும், கள்ளச்சாராய வியாபாரிகளுடன் கூட்டு வைத்துக் கொண்டு பெயருக்கு வழக்கு போடுகிறார்கள், எப்போதாவது ரெய்டு என்கிற பெயரில் சென்று கள்ளச்சாராய ஊறலை அழிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது.
இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லையில் உள்ள மாதகடப்பா, தேவராஜபுரம், கோரிபள்ளம் உள்ளிட்ட மலைப் பகுதிகளில் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் நந்தினி தலைமையில் போலீசார் இரண்டு நாட்களாக கள்ளச் சாராய ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது தேவராஜபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் காய்ச்ச தயாராக வைத்திருந்த சுமார் 1800 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்களையும், கோரிபள்ளம் பகுதியில் 1300 கள்ளச் சாராய ஊறல்கள், 65 லிட்டர் கள்ளச்சாராயம் மேலும் கள்ளச்சாராயம் காய்ச்ச பயன்படுத்தும் அடுப்புகள் மற்றும் மூலப்பொருட்களையும் கண்டறிந்து அழித்தனர். மேலும் தப்பி ஓடிய கள்ளச்சாராயம் காய்ச்சும் கும்பலைச் சேர்ந்த எழுமலை தங்கம், ஆகிய 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
அதேபோல் பேர்ணாம்பட்டு வட்ட காவல் ஆய்வாளர் ருக்மான்கதன் தலைமையிலான போலீசார் லட்சுமி வெடி மலைப்பகுதியில் நடத்திய சோதனையில் சுமார் 1,100 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் கண்டுபிடிக்கப்பட்டு கொட்டி அழிக்கப்பட்டது. குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் சின்னதுரை தலைமையிலான போலீசார் சாத்கர் மலைப்பகுதியில் சோதனை மேற்கொண்டு சுமார் 1,000 லிட்டர் கள்ளச்சாராய ஊறல்கள் மற்றும் 60 லிட்டர் கள்ளச்சாராயம் கொட்டி அழிக்கப்பட்டது.
மாவட்டம் முழுவதும் இது போன்ற குற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எச்சரித்துள்ளார். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள், விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதோடு, அவர்கள் மீண்டும் இந்தத் தொழில் செய்யாத வகையில் அவர்களுக்கு வேலை வாய்ப்புகள், வங்கி கடன்கள் ஏற்பாடு செய்து தந்து வேறு தொழிலுக்கு மாற்ற வேண்டும். லஞ்சம் வாங்கி பழக்கப்பட்ட சில போலீசார் இவர்கள் அந்தத் தொழிலை விட்டு வெளியே போகாமல் மிரட்டி அந்தத் தொழிலை செய்ய வைக்கும் போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கிற கோரிக்கையை சமூக ஆர்வலர்கள் வைக்கின்றனர்.