சில மாதங்களுக்கு முன்பு பஞ்சர் கடை உரிமையாளர் ஒருவர் கொலை செய்யப்பட்டதற்கு பழி தீர்க்க, அவரை கொலை செய்யக் கூலிப்படையினருக்கு திட்டம் தீட்டிக் கொடுத்ததாக, 19 வயது இளைஞரை வெட்டிக்கொலை செய்துள்ள சம்பவம், நாகை மாவட்டத்தில் பெரும் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.
நாகை அடுத்த மேல வாஞ்சூரில் பஞ்சர் கடை நடத்தி வந்த செந்தில், நரிமனம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தார். செந்திலுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த அகத்தியன் என்பவரது குடும்பத்திற்கும் நீண்ட நாள்களாக, ஊரில் யார் பெரிய ஆள் என்கிற பகை மூண்டபடியே இருந்துவந்ததுள்ளது.
ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அகத்தியனின் தம்பி கதிர், வாஞ்சூர் பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்தபோது, கொலை செய்ய செந்தில் தரப்பு முயற்சித்தப்போது, அதில் கதிர் தப்பித்தார். அதனைத் தொடர்ந்து இரண்டு தரப்பிற்குமான பகை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு, வாஞ்சூரில் அகத்தியனின் மகன் தினேஷைக் கொலை செய்யத் திட்டமிட்டு, மர்மநபர்கள் சிலர் விரட்டியதாக நாகூர் காவல் நிலையத்தில் தினேஷ் புகார் அளித்தார். புகாரை விசாரித்த நாகூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கிடப்பில் போட்டுள்ளனர்.
இதற்கிடையில் 20 நாட்களுக்கு முன்பு வாஞ்சூர் பகுதியில் உள்ள குளத்திற்கான மீன்குத்தகை நடைபெற்றுள்ளது. வழக்கமாக குளத்தை குத்தகைக்கு எடுத்துவந்த அகத்தியனுக்கு நெருக்கடி தரும் வகையிலும், இந்த முறை குளத்தின் குத்தகையைத் தன்வசப்படுத்தும் நோக்கத்துடன் ஏலத்தொகையை அதிகரித்தபடியே கேட்டு வந்துள்ளார். 20,000 ரூபாய்க்கு ஏலம் எடுக்கவேண்டிய குளத்தை சுமார் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் ஏற்றி விட்டிருக்கிறார் செந்தில்.
கோபத்தின் உச்சத்திற்கு சென்ற அகத்தியன் செந்திலைக் கொலை செய்யக் கூலிப்படை மூலம் நோட்டமிட்டு, பட்டப்பகலில் சரமாரியாக வெட்டிக் கொலை செய்து கோபத்தை தீர்த்துக்கொண்டனர். அதன்பின் அகத்தியனும், அவரது மகன் தினேஷ், உறவினர்கள் செல்வம், மணிகண்டன் உள்ளிட்ட நான்கு பேரும் தஞ்சாவூர் நீதித்துறை நடுவர் எண் 2 இல் சரண் அடைந்தனர்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்டு உயிரிழந்த செந்திலின் இறுதி சடங்குகள் நடந்த நாகூர் அடுத்துள்ள பனங்குடி அரிசி சேமிப்பு கிடங்கிற்கு பின்புறம் உள்ள இடத்தில், 19 வயதுடைய இளைஞர் ஒருவர் இறந்து கிடப்பதாக நாகூர் காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு சென்ற நாகை டி.எஸ்.பி. முருகவேல் உள்ளிட்ட காவல்துறையினர் விசாரணை நடத்தினர். உயிரிழந்த இளைஞர் மேலவாஞ்சூர் பகுதியைச் சேர்ந்த அசாருதீன் என்பதும், செந்தில் கொலை வழக்கில் முக்கிய புள்ளியான அகத்தியனின் வீட்டில் வாடைக்கு குடியிருந்தவர் என்பதும் தெரிய வந்தது. சந்தேகம் அடைந்த காவல்துறையினர், அசாருதீன் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது பனங்குடி சமத்துவபுரத்தை சேர்ந்த விஜயகுமார் மற்றும் பனங்குடி சண்ணமங்கலத்தை சேர்ந்த அஜித்குமார் என்பவரும் அதிகமாக பேசியிருப்பதை கண்டுபிடித்தனர். அதன்பின் இருவரையும் சந்தேகத்துடன் தேடி வந்தனர்.
இந்தநிலையில் பனங்குடி கிராம நிர்வாக அலுவலர் உமா முன்னிலையில், அஜித்குமார் சரண் அடைந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். பின்னர் அஜித்தை கைதுசெய்த காவல்துறையினர் விசாரனை நடத்தியபோது, இரண்டுபேரும் இணைந்து அசாருதினை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். பின்னர் கொட்டாரக்குடி பகுதியில் உறவினர் வீட்டில் பதுங்கி இருந்த விஜயகுமாரை கைது செய்தனர்.
‘செந்திலைக் கொலை செய்ய வந்த கூலிப்படைக்கு திட்டம் தீட்டிக் கொடுத்து, செந்திலைப் பின் தொடர்ந்து வந்து தகவல் கொடுத்ததும் அசாருதீன்தான் என்று தெரிய வந்துள்ளது. இதனால்தான் அசாருதீனைக் கொலை செய்தோம்’ என்று விஜயகுமாரும், அஜித்குமாரும் விசாரணையில் கூறியிருக்கின்றனர். நாகையில் பழிக்குப்பழியாக இரண்டு கொலைகள் நடந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.