ஈரோடு ரங்கம்பாளையம் பேருந்து நிறுத்தம் அருகே மாகாளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவில் வளாகத்தில் சில்வர் உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. அதில் பொதுமக்கள் காணிக்கையாக பணத்தைச் செலுத்திவந்தனர்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று இரவு பூசாரி கோவிலைப் பூட்டிவிட்டுச் சென்ற நிலையில், இன்று ஜனவரி 1-ந் தேதி புத்தாண்டையொட்டி காலையில் சிறப்புப் பூஜை செய்வதற்காக, கோவிலுக்கு வந்துள்ளார். அப்போது, கோவிலின் இரண்டு பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பூசாரி, உள்ளே சென்று பார்த்தபோது கோவில் வளாகத்தில் இருந்த சில்வர் உண்டியல் மாயமாகி இருப்பது தெரியவந்தது.
உடனடியாக இதுகுறித்து ஈரோடு தாலுகா போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் கோவிலுக்கு உடனடியாக வந்து இதுதொடர்பாக விசாரணை நடத்தினர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் கோயிலில் நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பூட்டை உடைத்து உண்டியலை தூக்கிச் சென்றது தெரியவந்தது. உண்டியலில் ஆயிரக்கணக்கில் பணம் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. நீண்ட நாட்களாக உண்டியல் திறக்கப்படாததால் எவ்வளவு பணம் இருக்கிறது எனத் தெரியவில்லை.
தொடர் விசாரணையில் கோவிலிலிருந்து கொள்ளையடிக்கப்பட்ட உண்டியல் அந்த இடத்தின் அருகே உள்ள சடயம்பாளையம் பைபாஸ் ரோட்டில் உள்ள ஒரு புதரில் கிடந்ததை தாலுகா போலீசார் கண்டுபிடித்தனர். உண்டியல் கிடந்த இடத்தின் அருகே ஒரு பையில் சில பண நோட்டுகளும் சிதறிக்கிடந்தது. உண்டியலையும் பணத்தையும் போலீசார் மீட்டு, விசாரணை நடத்தி வருகின்றனர்.
கொள்ளை நடந்த கோவில் அருகே உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வுசெய்தில் கொள்ளையர்கள் உருவம் அதில் பதிவாகியிருக்கிறது. தற்பொழுது அதனடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல் நேற்று முன்தினம் பழையப்பாளையம் ஓடை மேட்டில் உள்ள மதுரைவீரன், சக்தி மாரியம்மன் கோவில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர். கோவில் உண்டியலை கொள்ளையடித்த சம்பவங்கள் தொடர்ந்து நடந்துள்ளதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த இரண்டு கொள்ளைச் சம்பவத்தில் ஒரே குழுவினர் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர். கோயில் உண்டியல் கொள்ளை நடந்த இடத்தின் அருகாமையில்தான் தாலுகா காவல் நிலையம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.