முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின் முதல் சட்டமன்றக் கூட்டத் தொடர் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தின் உரையுடன் இன்று (21.06.2021) துவங்கியது. கலைவானர் அரங்கில் நடந்த இந்தக் கூட்டத்தொடரில் பேசிய ஆளுநர் உரையின் முக்கிய அம்சங்கள்:
16வது சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அத்துனை உறுப்பினர்களுக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொண்டார் கவர்னர்.
தமிழை இந்திய அலுவல் மொழியாக கொண்டுவர தமிழ்நாடு அரசு தொடர்ந்து பாடுபடும். தமிழ்நாட்டுக்கு மத்திய அரசு வழங்கும் தடுப்பூசிகள் போதுமானதாக இல்லை. 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்குத் தடுப்பூசி கிடைப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.
மத்திய அரசின் அதிகாரம் எந்தவகையிலும் பாதிக்கப்படாமல் இருப்பதைத் தமிழ்நாடு அரசு உறுதி செய்யும். செம்மொழி மத்திய ஆய்வு நிறுவனத்துக்குப் புத்துயிர் அளிக்கப்படும்.
முழு கவச உடை அணிந்து கோவிட் வார்டுக்குள் சென்று மருத்துவர்களையும் செவிலியர்களையும் முதல்வர் ஊக்கப்படுத்தினார். திமுக அரசு பதவியேற்ற பிறகு, 10,068 கோடி ரூபாய் நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 335.01 கோடி கிடைத்துள்ளது.
கோவிட் 19இன் மூன்றாம் அலை பரவலை சமாளிக்க ஆக்சிஜன் வாங்குவதற்கு 50 கோடி ஒதுக்கப்படும். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்படும். கிங்ஸ் மருத்துவமனை வளாகத்தில் 500 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை கட்டப்பட உள்ளது.
வேளாண் துறைக்கு முக்கியத்துவமளிக்கும் வகையில் தனி பட்ஜெட் போடப்படும். நிதிநிலை அறிக்கை குறித்த வெள்ளையறிக்கை வெளியிடப்படும். தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து பாதுகாக்கப்படும். தமிழ்நாட்டின் இடஒதுக்கீட்டு கொள்கை காலத்தை வென்று சமூகநீதியை உறுதி செய்துள்ளது. மாநில சுயாட்சியின் இலக்கை எட்டவும், உண்மையான கூட்டாச்சி தத்துவத்தை நிலைநிறுத்தவும் இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது.
அரசியல் கட்சியினர், கலைத்துறையினர், தன்னார்வலர்கள் என அனைவரும் இந்த அரசுக்குத் துணை நிற்கின்றனர். வேலைவாய்ப்புகளை உயர்த்த சிறப்புத் திட்டம் உருவாக்கப்படும். திருநங்கைகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த திறன் பயிற்சி அளிக்கப்படும். அரசுப் பணிகளில் எஸ்.சி., எஸ்.டி. காலி பாணியிடங்கள் நிரப்பப்படும்.
ஈழத்தமிழர்களுக்கு சம உரிமை, அரசியல் உரிமைகளை உறுதிசெய்ய இலங்கை அரசை அறிவுறுத்துமாறு மத்திய அரசிடம் வலியுறுத்தப்படும். இலங்கை தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க தேவையான சட்டங்களை இயற்றவும் திருத்தங்களை செய்யவும் மத்திய அரசைடம் வலியுறுத்தப்படும்.
அனைத்து தரப்பினருக்கும் கல்வி அளிப்பதை திமுக தனது கொள்கையாக வைத்திருக்கிறது. பொருளாதார மந்தநிலையைப் போக்கும் வகையில் அரசுக்கு ஆலோசனை வழங்க முதல்வருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு அமைக்கப்பட உள்ளது. இக்குழுவில், அமெரிக்காவின் மசாசூட்ஸ் தொழில்நுட்பக் கழக பேராசிரியர் எஸ்தர் டப்ளோ, இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் ரகுராம் ராஜன் உள்ளிட்ட அறிஞர்கள் இடம்பெறுவர்.
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க சட்டம் இயற்றி ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும். உழவர் சந்தைகளுக்குப் புத்துயிர் அளிக்கப்பட்டு மாநிலம் முழுவதும் உழவர் சந்தைகள் அமைக்கப்படும். கட்சத்தீவை மீட்க மத்திய அரசை வலியுறுத்தப்படும். மீனவர் நலனுக்காக தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அரசை வலியுறுத்தப்படும். சென்னையில் சிங்கார சென்னை 2.0 திட்டம் துவக்கப்படும்.
தமிழ்வழிக் கல்வி, அரசுப் பள்ளியில் பயின்றோருக்கு அரசு வேலையில் முன்னுரிமை கொடுக்கப்படும். சென்னை பெருநகர வெள்ள மேலாண்மைக் குழு அமைக்கப்படும். மின்வாரியத்தில் ஏற்பட்ட நிதி நெருக்கடிகள் குறித்து விரிவாக ஆய்வு நடத்தப்படும். தடையற்ற மின்சாரம் வழங்குவதை இந்த அரசு உறுதி பூண்டிருக்கிறது.
கோவில்களைப் பராமரிக்க மாநில அளவிலான ஆலோசனைக் குழு அமைக்கப்படும். கர்நாடக அரசு திட்டமிட்டுள்ள மேகதாட்டு அணை திட்டத்தை நிறுத்துமாறு மத்திய அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். காவிரி - குண்டலாறு இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த இந்த அரசு உறுதி பூண்டுள்ளது. புதிய ரேசன் அட்டைகள் பெற விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். இவ்வாறு ஆளுநர் உரையில் முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.