Published on 29/04/2020 | Edited on 29/04/2020
இந்தியா முழுவதும் ஆண்டுக்கு 4 முறை கிராமசபை கூட்டங்கள் நடைபெறும். இந்தியாவின் குடியரசு தினமான ஜனவரி 26, தொழிலாளர் தினமான மே 1, சுதந்திர தினமான ஆகஸ்ட் 15, காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ந்தேதி என 4 முறை கிராமங்கள் தோறும், ஊராட்சி சார்பில் கிராம சபை கூட்டங்கள் நடைபெறுகின்றன.
இந்த கிராம சபா கூட்டங்களில் அந்த கிராம மக்கள் தங்களது கிராம நலன், ஊராட்சி நிதி, வரிவருவாய், செலவு போன்றவற்றை பார்வையிடுதல் போன்ற பலவற்றை விவாதிப்பர், ஆய்வு செய்வர். கிராமசபை கூட்டங்களின் போது இயற்றப்படும் தீர்மானத்தின் மீது உச்சநீதிமன்றம் கூட ஆதிக்கம் செலுத்த முடியாத அளவுக்கு அதன் சட்டவிதிகள் பலமாகவுள்ளன.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் கிராமசபா கூட்டம் நடைபெற்றது. தமிழகத்தில் 3 வருடங்களுக்கு பிறகு உள்ளாட்சி தேர்தல் நடைபெற்று உள்ளாட்சி மக்கள் பிரநிதிநிதிகள் வந்திருந்ததால் கூட்டங்கள் சிறப்பாக நடைபெற்றன. இந்நிலையில் அடுத்த கிராமசபை கூட்டம் மே 1ந்தேதி நடைபெற வேண்டும்.
ஆனால் தற்போது கரோனா பாதிப்பால் உலகமே வழக்கமான பணியில் இருந்து ஸ்தம்பித்து உள்ளது. இந்தியாவும் அதற்கு விதிவிலக்கல்ல. அதோடு, இந்தியாவில் ஊரடங்கு அமலில் உள்ளது. அதோடு, கரோனா நோய் பரவும் தன்மை உடையது என்பதால், மே 1ந்தேதி நடைபெறவேண்டிய கிராமசபா கூட்டத்தை ரத்து செய்யசொல்லி ஆட்சியாளர்கள், மாவட்ட நிர்வாகங்களிடம் கூறியுள்ளனர்.
அதனை ஏற்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித்தலைவர் கந்தசாமி, மே 1ந்தேதி கிராமசபை கூட்டம் நடைபெறாது என அறிவித்துள்ளார்.