கரூர் மாவட்ட திமுக பொறுப்பாளரும், அரவக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினருமான செந்தில் பாலாஜி கடந்த மாதம் 12ம் தேதி அக்கட்சியின் பொறுப்பாளர்களுடன் மாவட்ட ஆட்சியர் அன்பழகனை சந்தித்து "ஒன்றிணைவோம் வா" மூலம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டவர்கள் வைத்த கோரிக்கை மனுவினை அளித்தார்.
அப்போது கரோனோ தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பான ஆய்வு கூட்டம் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றபோது கரூர், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற உறுப்பினர்களான அதிமுக உறுப்பினர்கள் கலந்து கொண்டபோது எதிர்கட்சி உறுப்பினர்களான என்னையும், குளித்தலை சட்டமன்ற உறுப்பினர் ராமர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை அழைக்கவில்லை என்று கேட்டதாகவும், அதற்கு ஆட்சியர் முறையாக பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய செந்தில் பாலாஜி, மாவட்ட ஆட்சியர் அன்பழகன் படித்த முட்டாள் என்று விமர்சித்து பேசினார். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அன்பழகன் தாந்தோன்றிமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில் தொற்று பரவும் கால கட்டத்தில் சட்டவிரோதமாக கூடுதல், கொலை மிரட்டல், அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்கு கடந்த 16ம் தேதி பதிவு செய்யப்பட்டது.
இது தொடர்பான வழக்கு கடந்த மாதம் 23ம் தேதி சி.பி.சி.ஐ.டிக்கு மாற்றம் செய்யப்பட்டது. இந்த நிலையில் செந்தில் பாலாஜி இந்த வழக்கில் தன்னை கைது செய்யக்கூடாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றம் சென்று முன் ஜாமீன் பெற்றார். செந்தில் பாலாஜி கரூர் சி.பி.சி.ஐ.டி அலுவலகத்தில் ஆஜராகி 2 வாரங்கள் கையெழுத்து இட வேண்டும் என்று நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கியது.
இதனை தொடர்ந்து கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜராகினார். பின்பு தாந்தோன்றிமலை சி.பி.சி.ஐடி அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டார். அவருடன் திமுக வழக்கறிஞர்கள் பலரும் உடன் வருகை தந்திருந்தனர்.