தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவும், கன்னியாகுமரி மக்களவை தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவும் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த நிலையில், கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு முடிந்து தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு உள்ளிட்ட பணிகளில் அ.தி.மு.க., தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் பிஸியாக உள்ளன.
தி.மு.க. தலைமையிலான கூட்டணியில், தி.மு.க. - ம.தி.மு.க. இடையே சட்டமன்றத் தேர்தலுக்கான தொகுதிப் பங்கீட்டுப் பேச்சுவார்த்தை பலகட்டமாக நடைபெற்று, ம.தி.மு.க.வுக்கு 6 சட்டமன்றத் தொகுதிகளை தருவதாக சம்மதம் தெரிவித்தது. இதனை ம.தி.மு.க. ஏற்ற நிலையில், அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் - ம.தி.மு.க.வின் பொதுச் செயலாளர் வைகோ ஆகியோர் முன்னிலையில் இரு கட்சிகளுக்கிடையே தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் ம.தி.மு.க. 'உதயசூரியன்' சின்னத்தில் போட்டியிடும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. மதுரை (தெற்கு), வாசுதேவநல்லூர், சாத்தூர், பல்லடம், அரியலூர், மதுராந்தகம் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. போட்டியிடுகிறது. ம.தி.மு.க. போட்டியிடும் 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் அ.தி.மு.க. வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் மதிமுக சார்பில் 6 தொகுதிகளில் போட்டியிட விருப்பமனு அளித்தவர்களிடம் இன்று (11.03.2021) மதிமுக தலைமை அலுவலகமான தாயகத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நேர்காணல் தொடங்கியது.