அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் உள்ளார். அதேசமயம் அவருக்கு ஏற்பட்ட நெஞ்சுவலியின் காரணமாக அவர் முதலில் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பிறகு நீதிமன்றத்தின் அனுமதியோடு காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு மருத்துவக்குழு கண்காணிப்பில் உள்ளார்.
இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜி சட்ட விரோதக் காவலில் உள்ளதால், அவரை விடுவிக்கக் கோரி அவரது மனைவி மேகலா, சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். இந்த மனுவைக் கடந்த வாரம் விசாரித்த நீதிமன்றம், செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற அனுமதி வழங்கியது. அதே சமயம் அமைச்சர் நீதிமன்றக் காவலில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது. அமலாக்கத்துறையினர் தங்கள் மருத்துவக் குழுவினரைக் கொண்டு பரிசோதனை செய்து கொள்ளவும் அனுமதி வழங்கியது. செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு மீது பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டு மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டது.
இதனிடையே அமைச்சர் செந்தில் பாலாஜி வகித்து வந்த மின்சாரம் மற்றும் மதுவிலக்கு துறைகளை வேறு அமைச்சர்களுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்டு, செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று ஆளுநருக்கு முதல்வர் கடிதம் எழுதியிருந்தார். ஆனால் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வதில் விரும்பம் இல்லை எனக் கூறி அதனை ஆளுநர் மறுத்திருந்தார். ஆனால் தமிழக அரசு செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராகத் தொடர்வார் என்று அரசாணை வெளியிட்டது.
இந்த நிலையில், இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து வழக்கறிஞர்கள் ரவி மற்றும் ராமச்சந்திரன் ஆகிய இருவரும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ‘செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பதில் தனக்கு விருப்பம் இல்லை என்று ஆளுநர் ரவி கூறியிருக்கிறாரே தவிர, அவரை பதவியில் இருந்து நீக்கம் வேண்டும் என்று எங்கே தெரிவித்திருக்கிறார் என்று மனுதாரரிடம் கேள்வி எழுப்பினார். மேலும் வழக்கில் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்தால் மட்டுமே பதவி இழப்பு செய்யலாம் என்று கூறிய நீதிபதி, இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வார் என்று முதல்வர் ஆளுநருக்கு எழுதிய கடிதத்தின் நகலை சமர்ப்பிக்க வேண்டும்’ என்று வழக்கை மதியத்திற்கு ஒத்திவைத்துள்ளனர்.