Skip to main content

60 வயது முதியவருக்கு 85 வயதுடைய தாய்மாமன் மடியில் அமர்ந்து காது குத்து! 

Published on 08/08/2023 | Edited on 08/08/2023

 

sensational talk about family function in vellore

 

வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த மருதுவல்லி பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏரிக்கோடி எனும் கிராமத்தில் வசித்து வருபவர் முனிவேல். இவருடன் 5 ஆண்கள் 3 பெண்கள் என மொத்தம் எட்டு பேர் பிறந்துள்ளனர். இதில் முனிவேல் அவரது தம்பி ராஜா இருவரைத் தவிர மற்றவர்கள் திருப்பதியில் சென்று மொட்டை அடித்து காது குத்து விழா நடத்திவிட்டனர் அவரது பெற்றோர். அண்ணன் தம்பி இருவருக்கு மட்டும் குடும்ப சூழ்நிலை காரணமாக காது குத்தவில்லை. கூலி வேலை செய்து வரும் இவர்களுக்கு திருமணமாகி பேரன் பேத்திகள் உள்ளனர். 

 

அண்ணன் தம்பிகளைப் பார்த்து காதே குத்தாதவங்க என பல ஆண்டுகளாக ஊர் மக்கள் கிண்டல் செய்துவந்துள்ளனர். சிலர் இது தெய்வ குத்தமாகிவிடும் என பயமுறுத்தி உள்ளனர். இதனை அடுத்து அவர்கள் குடும்பத்தார் ஒன்றிணைந்து இரண்டு பேருக்கும் காது குத்து விழா நடத்த வேண்டும் என ஏற்பாடுகள் செய்யத் துவங்கினர்.

 

முனிவேலுக்கு 60 வயதும், ராஜாவுக்கு 55 வயதுமாகிறது. இவர்களின் பேரன், பேத்திகளுக்கு காது குத்தவேண்டிய சமயத்தில் தாத்தாக்களுக்கு காது குத்துவதா என சிலர் கிண்டல் செய்துள்ளனர். அதைப்பற்றி குடும்பத்தார் கண்டுகொள்ளவில்லை. 

 

ஆடி 20 ஆம் தேதி அவர்கள் குலதெய்வம் கோவிலுக்கு சென்று பொங்கல் வைத்து கிடா வெட்டி காது குத்து விழா நடைபெற்றது. காதுகுத்து தாய்மாமன் மடியில் அமரவைத்து செய்வது வழக்கம். அதன்படி முனிவேல் மற்றும் ராஜாவுக்கு அவர்களது தாய்மாமன் 85 வயதான தங்கவேல் மடியில் அமரவைத்து காது குத்து விழா நடைபெற்றது. தாய்மாமன் சீராக 50க்கும் மேற்பட்ட வகை வகையான வரிசை தட்டுகளை வைத்து ஆரவாரம் செய்து மகிழ்ந்தனர் தாய்மாமன் தரப்பினர்.  

 

குலதெய்வ வழிபாடு செய்யும்பொழுது சாமி அழைப்பு நடைபெற்றது. இதில் அருள் வந்து ஆடியது போல் ஒரு முதியவர் ஆடிக்கொண்டிருந்தார். திடீரென பம்பை சத்தம் நின்றவுடன் இன்னும் இரண்டு அடி போடுடா நான் ஆத்தா வந்து இருக்கேன் என கேட்டு ஆடினார்.

 

60 வயது முதியவருக்கு 85 வயதுடைய தாய்மாமன் மடியில் அமரவைத்து காது குத்து விழா நடைபெற்றதை அப்பகுதியில் வியப்பாகப் பார்த்தனர். ஆனால் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் நெகிழ்ச்சியாக இருந்தனர். இந்த காது குத்து நிகழ்வு குறித்து சுற்றுவட்டார கிராமங்களில் ஆச்சர்யமாகப் பேசி வருகின்றனர். 

 

 

 

சார்ந்த செய்திகள்