மூத்த பத்திரிகையாளரும் கவிஞருமான துரை பாரதி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார். நக்கீரனில் ஆசிரியராகப் பணியாற்றிய இவர் புதியதாகப் பத்திரிகையையும் தொடங்கி நடத்தி வந்தார். அதன்பிறகு வெவ்வேறு பத்திரிகைகளிலும் பணியாற்றியிருக்கிறார். துரை என்று பத்திரிகையிலும், வித்யா ஷங்கர் என்று கவிதையிலும், துரை பாரதி எனக் காட்சி ஊடகத்திலும் அடையாளப்படுத்திக் கொண்டவர். இந்நிலையில், நேற்று இரவு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளார். இவரது மறைவுக்குத் தமிழக ஆளுநர் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் மூத்த பத்திரிகையாளர் துரை பாரதி மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘தமிழ்ப் புலனாய்வு இதழியலில் முன்னோடியாக விளங்கிய பல இதழியலாளர்களை உருவாக்கியவர் துரை பாரதி. பல ஆண்டுகளாகத் துடிப்போடு பணியாற்றிய துரை பாரதியின் மறைவு தமிழ் இதழியல் துறைக்கு பெரும் இழப்பு’ எனத் தெரிவித்துள்ளார்.