Skip to main content

“தமிழகத்தில் பொற்கால ஆட்சி நடக்கிறது” - அமைச்சர் செங்கோட்டையன்!

Published on 22/12/2020 | Edited on 22/12/2020

 

Sengottayan press meet erode mini clinic


ஈரோட்டில் இன்று (22.12.2020) மினி கிளினிக் திறப்பு விழாவில் கலந்துகொண்ட அமைச்சர் செங்கோட்டையன், செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது அவர், “தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்திற்காக பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை தொடர்ந்து செய்துவருகிறார். தமிழகமே வியக்கத்தக்க வகையில் மூன்று பணிகள் நிறைவேற்றப்பட்டு உள்ளது. 


ஒன்று, விவசாயிகளுக்கு குடிமராமத்துத் திட்டம் மூலம் ஏரிகள், குளங்கள், கால்வாய் தூர்வாரப்பட்டு, மழை நீர் சேகரிக்கப்பட்டுள்ளது.

 

இரண்டு, பள்ளி கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்கள் உருவாக்க நிதி வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் உயர் கல்வி, மருத்துவக் கல்லூரி, கூடுதல் சட்டக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. படிக்கின்ற இளைஞர்கள் தொழில் தொடங்க சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.

 

மூன்று, மின்வெட்டு இல்லாத மாநிலமாகவும், கட்டமைப்பு வசதிகள் கொண்ட மாநிலமாகவும் தமிழ்நாடு இருப்பதால், இங்கு ஏராளமானோர் தொழில் தொடங்க வருகின்றனர். 


நமது முதல்வர் பொற்கால ஆட்சியை அமைத்துள்ளார். இன்னும் 6 மாத காலத்திற்குப் பிறகு 5 முதல் 10 லட்சம் மாணவர்களுக்கு இந்தத் தொழிற்சாலை மூலம் வேலை வாய்ப்பு கிடைக்கும். கரோனா பரவல் காரணமாக இந்தக் கல்வி ஆண்டு ரத்து செய்யப்படுமா, அல்லது பள்ளிகள் திறக்கப்படுமா என்பது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முதல்வர் அறிவிப்பார்.


கரோனா காலத்திலும் அதிக கட்டணம் வசூலித்த பள்ளிகள் குறித்து என் கவனத்துக்கு வந்ததும் அந்தப் பள்ளிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கூடுதல் கட்டணங்கள் வசூலிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அந்தத் தொகையை மாணவர்களுக்குத் திரும்பவழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொங்கலுக்கு ரூ.2,500, மனிதாபிமான அடிப்படையில் கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, பொங்கல் பரிசாக வழங்கப்படுகிறது. தேர்தலுக்காகக் கொடுக்கப்படவில்லை. 
 

cnc


இந்தத் திட்டத்தை மக்கள் வரவேற்கிறார்கள். குறை கூறுபவர்களை மக்களே அவர்களை பார்த்துக் கொள்வார்கள். தமிழகம் முழுவதும் 2,900 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறோம். ஈரோடு மாவட்டத்தில் 288 பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளோம். முதல்வர் பழனிசாமியின் பொற்கால ஆட்சிதான் தழிழகத்தில் நடக்கிறது” என்று கூறினார்.

 

 

 

சார்ந்த செய்திகள்